அரியலூர்: ""அரசு தலைமை மருத்துவமனையில், அன்னபிளவு எனப்படும், உதடு பிளவு குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது,'' என அரியலூர் கலெக்டர் செந்தில்குமார் கூறியுள்ளார்.பொதுசுகாதாரத்துறை மற்றும் தமிழ்நாடு இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் இணைந்து, 24 லட்சம் ரூபாய் மதிப்பில், அரியலூர் மாவட்டத்துக்கு வழங்கியுள்ள, இரண்டு அமரர் ஊர்திகளை, அலுவலக வளாகத்தில், கலெக்டர் செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், சென்னை அமைந்தகரையில் பணியாற்றிய போது, டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்ன ஆனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து மகன் கோவிந்தராஜ், 19, என்பவருக்கு ஆறுதல் கூறினார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை பற்றி, டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அரசு தலைமை மருத்துவமனையின் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்வையிட்ட கலெக்டர் செந்தில்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் நோய்க்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் இம்மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. அரியலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள் மற்றும் எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும், உதடு பிளவு எனப்படும் அன்னபிளவு குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும், அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில், அறுவை சிகிச்சையுடன் கூடிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது, அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை காண்காணிப்பாளர் டாக்டர் வானொலி, டாக்டர்கள் ரமேஷ், கண்மணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.