காந்திஜியைத் "தமிழ்த்தென்றல்' திரு.வி.க.தான் பெருமையாக "காந்தி அடிகள்' என்று அழைத்து அவரை மகானாகத் தரிசித்தார். அத்தகைய மகாத்மா, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே சுதந்திர இந்தியா, சுய பலத்தோடு செயல்படுவதற்கு உரிய துறைகள் அனைத்தையும் பற்றித் தமது உரத்த சிந்தனைகளைத் தெளிவாகத் தெரிவித்து வந்துள்ளார்.
அவற்றில், மிக முக்கியமானது கல்வித்துறை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திய கல்வித்திட்டம் கவர்னர் மெக்காலேயின் "குமாஸ்தா கல்வித் திட்டம்'தான்.
அதற்கு மாற்றாக மட்டுமல்லாமல், அதனைவிடவும் மகத்தானதாகவும் உருவாக்கப்பட்ட கல்வித் திட்டம்தான் காந்தி அடிகளின் கல்வித்திட்டம். வார்தாவுக்கு அருகிலுள்ள சேவா கிராமத்தில் சுதந்திர தாகமுள்ள அறிஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி, நாட்டு முன்னேற்றத்திற்கான ஒரு தேசியச் சிந்தனையை உருவாக்க முயற்சி எடுத்தார்.
மதிப்பிற்குரிய அரியநாயகம், ஆஷாதேவி, டாக்டர் ஜே.சி. குமரப்பா, கிருபளானி முதலிய அறிஞர்களிடம் கிராமக் கைத்தொழில்களைப் பற்றித் திட்டமிடுமாறு கேட்டுக் கொண்டார்.
டாக்டர் ஜாகீர் உசேனிடம் சுதந்திர இந்தியாவின் கல்விமுறை எப்படிப்பட்டதாக அமைய வேண்டும் என்பதைப் பற்றிய சிந்தனைகளைத் தருமாறு கேட்டுக் கொண்டார்.
எந்த அளவுக்கு உண்பது,- எந்த உணவை உண்பது முதலிய விஷயங்களைப் பற்றிப் பூஜ்யர் வினோபா பாவேயைச் சிந்திக்கும்படி உற்சாகப்படுத்திவிட்டார்.
இயற்கை மருத்துவம் பற்றித் திட்டம் ஒன்றை வகுக்கும்படி டாக்டர் பல்சாலி என்ற மருத்துவ அறிஞரைக் கேட்டுக் கொண்டார்.
சுதந்திரத் தாகமுள்ள அந்த இந்திய அறிஞர்கள் அருமையான முடிவுகளை, 14 அம்சத் திட்டமாக காந்தி அடிகளின் தலைமையில் உருவாக்கினார்கள். காங்கிரஸ் மகாசபை அந்த 14 அம்சத் திட்டத்தை வரவேற்று, அதனை ஒரு தேசியத் திட்டமாகவே வரித்துக் கொண்டது. தேசத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் இந்த 14 அம்சத் திட்டத்தைப் பற்றியே காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் பேசி வந்தனர்.
1935-இல் உத்தமர் காந்தியடிகள் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மகோன்னதமான 14 அம்சத் திட்டத்தை இன்றுவரை நாம் மறந்தே போய் விட்டோம்!
காந்தியடிகள் உருவாக்கிய கல்வித்திட்டத்தின்படி, மாநில மொழிகளிலேயே 6 வயதிலிருந்து 14 வயது வரை ஆதாரக் கல்வி, அதுவும் "இலவசமாகவும் கட்டாயமாகவும்' இருக்க வேண்டும். இதற்கு அடுத்தது உயர் ஆதாரக் கல்வித் திட்டம்.
உயர் ஆதாரக் கல்வியின் சிறப்பு, படிக்கும்போதே, அப்படிப்புக்கு ஏற்படும் செலவுகளை அந்த மாணவனே உழைத்துச் சம்பாதிப்பதாகும். இந்தப் புதிய கருத்தமைப்பு அன்றைய கல்வி நிபுணர்களையும் சிந்திக்க வைத்தது.
இந்தியாவிற்கு இது புது மாதிரியாகத் தோன்றினாலும், இதுபோன்ற நடைமுறைகள் அமெரிக்கா முதலிய நாடுகளில் அன்றே இருந்தன. அங்குள்ளவர்கள் அதனைப் பாதிநேரம் உத்தியோகம், பாதிநேரம் படிப்பு என்றனர்.
இங்கேயும் அதனை நடைமுறைப்படுத்தினால், எழுதப் படிக்க மட்டுமே தெரிந்த இங்குள்ள பட்டதாரிகள் கைத்தொழிலும் கற்றுச் சம்பாதிக்க முடியும். அத்தகையவர்கள் பட்டதாரிகளான பின்பும் வேலை தேடுபவர்களாக அலைவதற்குக் காரணம், அவர்களின் கைகளில் வேலைத்திறன் இல்லை.
பத்தாம் வகுப்புப் படித்து, ஐ.டி.ஐ. தொழில் பயிற்சிபெற்ற கைவினைஞர்களுக்கு இந்தியாவிலும் அரபு நாடுகளிலும் நிறைய தேவை இருக்கிறது. சூப்பர்வைசர்களாக, ஃபிட்டர்களாக, வெல்டர்களாக அவர்களுக்கு அங்கு வேலை கிடைக்கின்றது.
இலவசத்தை இழிவென்றும், உழைப்பை உன்னதம் என்றும் கூறுகிற தத்துவம்தான் காந்தியம். விரல்களைப் பழக்கி வித்தைகளைக் கற்றுக் கொண்டுவிட்டால், அவன் படைப்பாளியாகி விடுவான். அதுதான் காந்தியத்தின் நோக்கம்.
அதனால்தான் மழலைக் குழந்தைகளின் பிஞ்சு விரல்களில் பஞ்சும், தக்ளியும் கொடுத்துச் சிறார்களை நூற்கச் சொன்னார் காந்திஜி. இன்னும் கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்குக் களிமண்ணைக் கொடுத்துப் பொம்மைகளைச் செய்ய வைத்து அவர்களின் படைப்புத் திறனை மலர வைத்தார்.
1952-இல் மூதறிஞர் ராஜாஜி, படிக்கும்போதே ஒரு வேலையையும் கற்றுக்கொள்ளும் யோசனையைத் திட்டமாக்கினார். வீட்டில் தகப்பனார் செய்யும் வேலையை மகன் பழகிக் கொள்வது சுலபம். பள்ளிக்கும் அவன் படிக்கச் செல்லலாம் என்றார்.
இத்தொழிற்பயிற்சியை கிராமங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் 5 வயதுச் சின்னஞ்சிறு சிறார்களுக்குத் தரச் சொன்னார். ஆனால், நாங்கள் முதல்வர் ராஜாஜியிடம் போய் சிறுவர்களுக்கு வேண்டாம், நகரங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் அமல்படுத்தலாம் என்றோம். ராஜாஜி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
1952-லேயே உயர்நிலைப் பள்ளிகளில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் கைவினைஞர்களான டிரைவர், டர்னர், ஃபிட்டர், எலக்ட்ரீசியன், பிளம்பர்களை நாம் எளிதாக அப்போதிருந்தே உருவாக்கியிருக்கலாம். குமாஸ்தாக்கள் உற்பத்தி குறைந்திருக்கும்.
இப்போதைய நமது பள்ளிகளில் பாதிநேரம் உழைப்பு என்கிற முறை இல்லை. பள்ளி வேலைநேரம் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிகின்றது. இதனால்தான் மாணவர்களுக்கு ஓய்வுநேரம் அமைவதில்லை.
அதனால் நமது கல்விக்கூடங்களில் "ஷிப்ட்' முறையைக் கொண்டு வரலாம். அதனைக் கொண்டு வருவதில் இரண்டு பலன்கள் உடனடியாகக் கிடைக்கின்றன. ஒன்று, கட்டடங்களுக்காக நாம் மேலும் மேலும் செலவு செய்ய வேண்டியதில்லை. ஒரே கட்டடம் மூன்று மடங்கு மாணவர்களுக்குப் பயன்படும்.
குழந்தைக்கு சிந்தனை சக்தியைச் செழிக்கச் செய்வதுதான் காந்தியக் கல்வி. சிந்தனை வளர்ச்சிக்குத் தாய்மொழிக் கல்விதான் சிறந்தது எனபதை மகாத்மா காந்தியடிகள் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்.
6-ஆம் வகுப்புவரை தாய்மொழியில் கற்கும் சிறார்கள் அந்த மொழியினை இலக்கணக் கட்டமைப்போடு மனதில் பதித்துக் கொள்வார்கள். பிறகு அதன் பின்னணியில் எத்தனை மொழிகளாக இருந்தாலும் எளிதாகக் கற்றுக் கொள்ள அது உதவும் என்று தமது அனுபவத்தை வினோபாஜி சொல்லியிருக்கிறார். அவருக்கு 17 மொழிகள் தெரியும்.
ஜப்பான், கொரியா, தைவான் முதலிய நாடுகள் இன்றைக்கு வியக்கத்தக்க முன்னேற்றத்தைத் தாய்மொழிக் கல்வி மூலமாகவே அடைந்துள்ளன.
மேல்நிலைப் பள்ளி இறுதிவரை தாய்மொழி தமிழிலேயே எல்லாப் பாடங்களையும் அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்க வேண்டும். ஆங்கிலம் ஒரு துணைப் பாடமாக 6-ஆம் வகுப்பிலிருந்து இருக்கலாம். இந்தியும் ஒரு துணைப் பாடமாக 8-ஆம் வகுப்பிலிருந்து இருக்கலாம். துணைப் பாட மொழிகளில் வேறு மாநில மொழிகளைப் படிக்கவும் உரிமை வேண்டும்.
உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளி நிர்வாகங்களை மாநகராட்சி, நகராட்சி, ஜில்லா பரிஷத் ஆகியவை மேற்கொள்ள வேண்டும்.
பாடத் திட்டத்தை நிர்ணயிப்பதில் உதவி செய்தல் மற்றும் பள்ளி நடைமுறைகளை மேற்பார்வையிடுதல் ஆகியவற்றை மட்டுமே கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும்.
மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கத் தனியாக ஓர் அரசுத் துறையும், ஆயிரக்கணக்கான அதிகாரிகளும், ஊழியர்களும் அவசியமில்லை. அதற்குப் பதிலாக ஓர் உணவகம் தொடங்குவதற்கு அனுமதியளித்து, அந்த உணவகம் அதைச் சுற்றிலும் 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள பள்ளிகளுக்கு நேரில் சென்று சத்துணவு வழங்கும் முறையைக் கொண்டு வரலாம்.
அதற்கான செலவுத் தொகையை அந்த உணவகத்திற்கு அரசாங்கம் கொடுத்துவிடலாம். சரியாக நடக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்கு மட்டும் சில அரசு அலுவலர்கள் போதும்.
5-ஆவது வகுப்பு மாணவ மாணவியருக்கு அவர்கள் வீட்டிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நடந்து போகும் வகையில் பள்ளிக்கூடம் இருக்க வேண்டும். 10-ஆவது வரை 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும்.
மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்லக் கூடியவாறு 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும். மாணவர்களைப் பள்ளிகளில் இப்படித்தான் சேர்க்க வேண்டும் என்பதைச் சட்டமாக்க வேண்டும்.
வினோபாஜி சொன்னது, ""தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அதிகாலையில் 6 மணி முதல் 8 மணி வரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குப் பாடங்களைச் சொல்லித் தந்துவிட்டு, அதற்குமேல் வேறு வேலைகளுக்குச் செல்லலாம். இதனால் அரசுக்கும் செலவு குறையும். குழந்தைகளுக்கும் விளையாட நேரம் கிடைக்கும்''.
டாக்டர் மேரியா மாண்டிசோரி அம்மையார் 1900-இல் உருவாக்கிய கல்வி முறைதான் மாண்டிசோரி கல்விமுறை. குழந்தையின் சுய சிந்தனையை வளர்க்கும் பாங்கில் அக்கல்விமுறை அமைந்தது.
இதேபோல, கிண்டர் கார்டன் என்ற மற்றுமொரு மழலையர் பள்ளியும் பிரபலமாகியுள்ளது. அதில் படிக்கும் மழலைச் சிறார்களுக்கு வயது 3 தான். அந்த வயதில் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர்.
அக்குழந்தைகள் மேலைநாட்டுப் பாணியில் கழுத்துக்கு "டை' கட்டி, காலுக்கு "ஷூ' மாட்டி மூட்டை கட்டிய புத்தகப்பையைச் சுமந்து கொண்டு பள்ளி வாகனத்தில் செல்லுவதைப் பார்க்கிறோம். இப்பள்ளிகளில் படிக்க நிறையச் செலவாகும். ஆங்கிலேயர் காலத்தில்கூட இப்படியொரு நடைமுறை இருந்தது இல்லை.
காந்தியக் கல்விமுறை எளிமையானது, சிக்கனமானது, இந்தியப் பண்பாட்டு அம்சங்கள் கொண்டது. காந்திஜியின் கல்விச் சிந்தனைகளைக் கருத்தில் கொண்டு நமது சுதந்திர இந்தியாவில் நவீனக் கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது எனது நெடுநாளைய ஆசையாகும்.
1995-இல் பொள்ளாச்சியில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் தேசிய உணர்வுள்ள எனது பாட்டனார் பழனிக்கவுண்டர் பெயரில் நானே ஒரு தொழில் பள்ளிக்கூடத்தைத் தொடங்கினேன். தொடங்கப்பட்ட அந்த மேல்நிலைப் பள்ளியில் ஒரு நேரம் படிப்பு, ஒரு நேரம் உழைப்பு என்ற கல்வித் திட்டத்தை அரசு அங்கீகாரத்துடன் முதன்முதலாகத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தினேன்.
இப்பள்ளியில் மாணவர்கள் மூன்று நாள்கள் கற்றுக் கொள்வதும், மூன்று நாள்கள் தொழிற்சாலைகளுக்குப் போய் உழைப்பதும் என்ற முறையில் நடைபெற்று வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 60 சதவிகிதத்திற்கும் குறைவான மதிப்பெண் பெற்ற மிகச் சாதாரணமான 50 மாணவர்களை 1995-இல் இப்பள்ளியில் முதலில் சேர்த்தோம். இப்போது பழனிக்கவுண்டர் மேல்நிலைப்பள்ளியில் 800 மாணவர்கள் படிக்கின்றனர்.
ஆட்டோமொபைல், மெஷினிஸ்ட், எலக்ட்ரிகல் ரீவைண்டிங், ஜெனரல் மெஷினிஸ்ட், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, விவசாயம் ஆகிய 6 பாடப் பிரிவுகளில் அம்மாணவர்கள் படிக்கின்றனர். இதற்கான ஆசிரியர்களும் முழுநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
1995-இல் தொடங்கப்பட்ட இந்த இரண்டு ஆண்டு வகுப்புக்கு தமிழக அரசின் தொழிற்கல்வி இலாகா அங்கீகாரம் தந்து, இதற்கான அரசு ஆணையை 1997-இல் வழங்கியது. 1997 மார்ச் மாதம் நடந்த தேர்வில் 82 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றனர். 2003-ஆம் ஆண்டில் தேர்ச்சி 89 சதவிகிதமாகும்.
எஸ்.எஸ்.எல்.சி.யில் 250-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்ற இம்மாணவர்கள், இத்தனை சிறப்பாகப் பயில்வதற்குக் காரணம் இத்தொழிற்கல்வியைப் படித்து வெளியே வந்தால் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கைதான்.
தமிழ்நாட்டில் 2002-ஆம் ஆண்டிற்கான சிறந்த தொழிற்கல்விப் பள்ளியாக பொள்ளாச்சி பழனிக்கவுண்டர் மேல்நிலைப்பள்ளியை தில்லி தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி.) தேர்வு செய்தது. அதற்கான விருதினை 5.7.2002-இல் போபாலில் நடைபெற்ற அரசு விழாவில் மத்திய அரசு வழங்கியது. இந்த விருதே இத்தொழிற் கல்வியின் சிறப்பை விளக்கப் போதுமானதாகும்.
இங்கு பயிலும் மாணவர்களுக்குத் தொழிற்சாலைகளில் செய்யும் வேலைக்கு மாதம் ரூ.250 ஊதியமாக அவை கொடுக்கின்றன. படித்து முடிந்தபின், பெரும்பாலானோர் அங்கேயே வேலைக்குச் சேர்கிறார்கள். பலர் பாலிடெக்னிக்குகளில் 2ஆவது ஆண்டிலும், சிலர் பி.இ., முதலாவது ஆண்டிலும் சேர்கிறார்கள்.
அதேசமயம் பிற பள்ளிகளிலிருந்து "பிளஸ் 2' வகுப்பு முடித்து வெளிவரும் மாணவர்களுக்கு இது போன்று சம்பாதிக்கும் கைத்திறன் இல்லை.
பழனிக்கவுண்டர் மேல்நிலைப்பள்ளியின் பாடத்திட்டத்தைத் தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் நடைமுறைப்படுத்துவது நல்ல பலனைத் தரும். குறைந்தபட்சம் தமிழகத்திலுள்ள 300 பாலிடெக்னிக்குகளிலாவது பகுதிநேரப் படிப்பையும், பகுதிநேர உழைப்பையும் கட்டாயமாக்கலாம். அப்படிச் செய்தால் காந்தியக் கல்வித் திட்டத்தை மறுமலர்ச்சி செய்த மகத்தான காரியமாக அது அமையும்.