முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

கடந்த, ஜூலையில் நடந்த, குரூப் - 4 தேர்வு முடிவுகள், வெளியானது. தமிழக அரசுப் பணிக்கு, 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


கடந்த, ஜூலையில் நடந்த, குரூப் - 4 தேர்வு முடிவுகள், நேற்று மாலை வெளியானது. இதன் வழியாக, தமிழக அரசுப் பணிக்கு, 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 நிலையில், 10,793 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, ஏப்ரல் மாதம் வெளியானது. தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு, பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி என்பதால், போட்டி போட்டு இவ்வருடம், பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.ஏப்ரல், 27 முதல், கடைசி தேதியான, ஜூன், 4 வரை, 12 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். எப்போதும் இல்லாத அளவிற்கு, தேர்வர் எண்ணிக்கை ,10 லட்சத்தை தாண்டியதால், தேர்வை நடத்துவது, டி.என்.பி.எஸ்.சி.,க்கு சவாலாக விளங்கியது.

எனினும், மாவட்டக் கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுடன், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ், அவ்வப்போது ஆலோசனை நடத்தி, உரிய ஏற்பாடுகளைச் செய்தார். இதையடுத்து, ஜூலை, 7ம் தேதி, 4,309 மையங்களில், தேர்வுகள் நடந்தன.மொத்தம், 200 கேள்விகள் தரப்பட்டு, ஒரு கேள்விக்கு, 1.5 மதிப்பெண் வீதம், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வில், 75 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.முந்தைய தேர்வுகளைப் போல் இல்லாமல், சிந்தித்து விடை அளிக்கும் வகையில், கேள்விகள் இருந்ததால், போட்டி கடுமையாக  இருக்கும் என, தேர்வர் கருத்து தெரிவித்தனர். அதனால், தேர்வு முடிவுகளும், தேர்வர் மத்தியில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.தர்மபுரி மாவட்டத்தில், 13 தேர்வர்களுக்கு வழங்கிய கேள்வித்தாளில், 200 கேள்விகளுக்கு பதில், 150 கேள்விகள் அச்சாகி இருந்தது, பிரச்னையை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட தேர்வர், சென்னைஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், விடைத்தாள் மதிப்பீடு செய்ய அனுமதித்து, குரூப் - 4 முடிவை வெளியிட, இடைக்கால தடை விதித்து, ஐகோர்ட் உத்தரவிட்டது.


இதற்கிடையே, பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு, மறுதேர்வு நடத்தப்பட்டது. 4ம் தேதி, மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்வு முடிவை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி, ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால், தேர்வு முடிவு, எப்போது வேண்டுமானாலும், "ரிலீஸ்' ஆகலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.அதன்படி, நேற்று மாலை, குரூப் - 4 தேர்வு முடிவை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. தகவல் அறிந்த தேர்வர், ஒரே நேரத்தில், தேர்வாணைய இணையதளத்தைப் பார்க்க முயன்றதால், இணையதளம் ஸ்தம்பித்தது. தேர்வு முடிவை உடனடியாக அறிய முடியாமல், தேர்வர் தவித்தனர்.
இந்த தேர்வு முடிவை அடுத்து, 10 ஆயிரம் பேர், தமிழக அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். எனினும், இன சுழற்சி வாரியான, "கட்-ஆப்' மதிப்பெண் விவரங்களோ, எந்தெந்த பிரிவில், யார்  
அதிகபட்சமதிப்பெண்களை பெற்றனர் என்ற விவரங்களோ, வெளியிடப்படவில்லை.

இது குறித்து, தேர்வாணைய வட்டாரம் கூறியதாவது:இன சுழற்சி வாரியான, "கட்-ஆப்' மதிப்பெண் விவரம், ஒரு வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை, "ஸ்கேன்' செய்து, தேர்வாணைய இணையதளத்தில், "அப்லோட்' செய்ய வேண்டும்.இதை, இன்று முதல், 17ம் தேதி வரை செய்ய வேண்டும். அதன் பின், சான்றிதழ்களை சரிபார்த்த பிறகே, இன சுழற்சி வாரியாக, "கட்-ஆப்' மதிப்பெண்களை வெளியிட முடியும். "கட்-ஆப்' மதிப்பெண் வெளியிட்ட பின், கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.