முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

உண்டு உறைவிட பள்ளியில் தூங்க வசதியின்றி தவிப்பு : மலைவாழ் மாணவர்கள் அவதி

வால்பாறையில், அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட பள்ளி உறங்க இடம் இல்லாமல், மலைவாழ் மாணவர்கள் தவிக்கின்றனர்.
வால்பாறை டவுன் கக்கன் காலனியில் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட நலப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆதிவாசி மாணவர்களின் கல்வித்தரம் உயர துவங்கப்பட்டுள்ள இப்பள்ளியில் பரமன்கடவு, காடம்பாறை, நெடுங்குன்று, கருமுட்டி, சங்கரன்குடி, உடுமன்பாறை உள்ளிட்ட செட்டில்மெண்ட் பகுதியிலிருந்து 80 மாணவர்கள் வருகின்றனர். மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்வித்தரம் உயர வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் மாணவர்கள் தங்கும் அறை கட்டப்பட்டது. மாணவ, மாணவியருக்கு தனித்தனி அறைக்கட்டப்படிருந்தாலும், மொத்தம் 30 மாணவர்கள் மட்டுமே தங்கும் அளவுக்கு இந்த அறைகள் உள்ளன. இதனால், மாணவர்கள் இரவு நேரத்தில் அறையில் படுக்க முடியாமல், வகுப்பறையில் படுக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியில், தற்போது 110 மாணவர்கள் படித்து வரும் நிலையில் வகுப்பறைகள் தேவையான அளவு கட்டப்பட்டுள்ளன. ஆனால் குடிநீர் வசதி, தங்கும் வசதி, குளியல் அறை உள்ளிட்ட வசதிகள் மிக குறைவாக இருப்பதால், மாணவர்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.இது குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனிதாசில்தார் ஷியாமளா கூறியதாவது: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் சேத்துமடை, வால்பாறை அகிய இரண்டு பகுதிகளில் மட்டும் தான் உண்டு, உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் தங்கும் அறை கட்ட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் கூடுதல் படுக்கை அறை கட்டப்படும். இந்த பள்ளிக்கு நேரடியாக பார்வையிட்ட பின்னர் குறைபாடுகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு ஆரம்ப காலத்தில் செட்டில்மெண்ட் பகுதி மாணவர்கள் துவக்கபள்ளியை எட்டி பார்ப்பதே மிக அரிதாக இருந்தது. நாளைவில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்கள் அவர்களிடம் நேரடியாக சென்று எடுத்துக்கூறி செட்டில்மெண்ட் பகுதியிலேயே துவக்கபள்ளியும் துவங்கப்பட்டது. மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில், வால்பாறை டவுன் பகுதியில் உண்டு, உறைவிடப்பள்ளியும் செயல்பட்டுவருவதால், மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கல்லூரியில் பட்டம் பெற்று, அரசு வேலையில் பல்வேறு செட்டில்மெண்ட் பகுதியை சேர்ந்த ஆதிவாசி மாணவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.