கடினமான செய்யுள்களையும் பாடல்கள் வடிவில் எளிதில் கற்றுத் தரலாம் என்பதை நடைமுறையில் நிரூபித்து வருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் முருகன்.
தமிழோ, ஆங்கிலமோ மனப்பாடப் பாடல்கள் பகுதி என்றால் மாணவர்களுக்கு கொஞ்சம் தடுமாற்றம்தான். கவிதை நடையில் எழுதப்பட்டிருக்கும் செய்யுள்களை மனப்பாடம் செய்வது எப்படி பிரித்து உச்சரிப்பது எப்படி என்று குழம்பித் தவிப்போர் பலர். அவர்களுக்காகவே இசை வடிவில் செய்யுள்களை மாற்றி, இசைத் தட்டாக வெளியிட்டிருக்கிறார் காரைக்கால் அருகே நெடுங்காட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முருகன்.
தமிழோ, ஆங்கிலமோ மனப்பாடப் பாடல்கள் பகுதி என்றால் மாணவர்களுக்கு கொஞ்சம் தடுமாற்றம்தான். கவிதை நடையில் எழுதப்பட்டிருக்கும் செய்யுள்களை மனப்பாடம் செய்வது எப்படி பிரித்து உச்சரிப்பது எப்படி என்று குழம்பித் தவிப்போர் பலர். அவர்களுக்காகவே இசை வடிவில் செய்யுள்களை மாற்றி, இசைத் தட்டாக வெளியிட்டிருக்கிறார் காரைக்கால் அருகே நெடுங்காட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முருகன்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடங்களிலுள்ள செய்யுள்களுக்கு தாமே சொந்தமாக இசை அமைத்து பாட்டுகளாகப் பாடி, ‘பாடிப் பயில்வீர்’ என்னும் இசைத்தட்டாக வெளியிட்டுள்ளார் இவர். இந்தப் புதிய முயற்சியைப் பற்றி அறிவதற்காக அவரைச் சந்தித்தோம்.
என்னுடைய சொந்த ஊர், காரைக்கால் அருகேயுள்ள விழிதியூர் என்ற கிராமம். பி.காம் பட்டப் படிப்பு முடித்தவுடன், புதுவையில் ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயப் படிப்பு முடித்தேன். பின்னர் ஆங்கிலத்தில் மேலும் ஒரு பட்டம் வாங்கினேன். 2000-ஆம் ஆண்டு முதல் நான் படித்த அதே விழிதியூர் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். மூன்றாண்டுகளில் பதவி உயர்வு பெற்று, தற்போது நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கிறேன். சிறு வயது முதலே இசை மீது எனக்கு ஆர்வம் அதிகம். இசை பற்றிய அறிவு இல்லாதவர்களும்கூட பாடல்களை இசையுடன் கேட்கும்போது விஷயம் அப்படியே மனதில் தங்கிவிடும். தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவுடன் தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்யுள்களுக்கு சொந்தமாக நானே இசையமைத்து பாடல்களாகப் பாடி மாணவர்களுக்கு கற்பித்து வந்தேன். அதை ஆர்வமுடன் கற்கும் மாணவர்கள் அந்தச் செய்யுளை அப்படியே திரும்ப ஒப்புவிப்பார்கள். மீண்டும் மீண்டும் படித்து மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இருக்காது. மாணவர்களும் எளிதில் புரிந்துகொள்வார்கள். இதை ஏன் மற்ற மாணவர்களுக்கும் பயன்படும் விதத்தில் செய்யக்கூடாது என்று தோன்றியது. எல்லா ஆசிரியர்களும் மாணவர்களுக்குப் புரியும் வகையில் இசை மூலம் செய்யுள்களை பாடலாகக் கற்பிக்க வேண்டும் என்று விரும்பியதால், செய்யுள் பாடல்களை ‘பாடிப் பயில்வீர்’ என்ற இசைத்தட்டாக உருவாக்கினேன்" என்கிறார் முருகன்.
இவர் உருவாக்கியுள்ள இசைத்தட்டில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தில் உள்ள 54 செய்யுள் பாடல்களும் இசையமைத்துப் பாடப்பட்டுள்ளன. இதில் ஒன்றாம் வகுப்பில் உள்ள 11 செய்யுள்கள், இரண்டாம் வகுப்பில் உள்ள 14 பாடல்கள், மூன்றாம் வகுப்பில் உள்ள 9 பாடல்கள், நான்காம் வகுப்பில் உள்ள 9 பாடல்கள், ஐந்தாம் வகுப்பில் உள்ள 11 செய்யுள்கள் இசை அமைத்து பாடப்பட்டுள்ளன. ‘பாடிப் பயில்வீர்’ என்ற இந்த இசைத்தட்டை, புதுவை முதல்வர் ரங்கசாமி, கடந்த செப்டம்பரில் வெளியிட்டார்.
மகிழ்ச்சியான கற்றல் நிலவவும், தமிழ்ப் பாடத்தை எளிமையாகவும், ஆர்வமாகவும் கற்க இந்த இசைத்தட்டு உதவும். மேலும் செய்யுள்களை ராகத்தோடு பாடல்களாகப் பாடிக் கற்பதால், மாணவர்களின் மனதில் நீண்ட நாட்களுக்கு நிலைத்துவிடும். அது மட்டுமின்றி மாணவர்களின் குரல் வளம், இசை ஞானம் போன்றவற்றை உருவாக்கவும் உதவும். ஆசிரியர்களும் எளிமையாக செய்யுளைக் கற்பிக்க முடியும். இது கல்விக்காக செய்யப்பட்ட ஓர் அர்பணிப்பு. இதை நான் வணிக நோக்கில் செய்யவில்லை. அரசு உதவி செய்தால் இதை மக்களிடம் எளிதில் கொண்டுபோய் சேர்த்துவிடலாம்" என்று சொல்லும் முருகன், தனது இந்த முயற்சிக்கு மனைவி சங்கீதா, பள்ளி முதல்வர் மாரிமுத்து, கல்வித்துறை இயக்குநர் வல்லவன், இசை அமைப்பாளர்கள் சத்யராஜ் மற்றும் சத்தியசீலன், பாடகர்கள், சக ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர் என்கிறார்.
கடினமான செய்யுள்கள் மாணவர்களுக்கு கற்கண்டாய் இனித்தால் நல்லதுதானே! -நன்றி புதிய தலைமுறை