டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் - 4 தேர்வின் முடிவை வெளியிட, சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னசாமி, முருகன் ஆகியோர் தனித்தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 10 ,718 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, கடந்த ஜூலை 7ம் தேதி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. அத்தேர்வில் நாங்களும் கலந்து கொண்டோம். தேர்வில் எங்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளில், 200 கேள்விகளுக்குப் பதிலாக 105 கேள்விகள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. 1 முதல் 59 வரையிலான கேள்விகள் மீண்டும் மீண்டும் அச்சிடப்பட்டிருந்தன. இதனால், 95 கேள்விகளுக்கு எங்களால் பதிலளிக்க முடியவில்லை.
இதனால், அரசு வேலை பெறுவதற்கான எங்களது வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். அதில், எங்களுக்கு மறுதேர்வு நடத்தும்படி கோரிக்கை மனு அளித்தோம். எனினும், பணியாளர் தேர்வாணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அந்த மனுக்களில் கூறியிருந்தனர்.
இந்த மனுக்கள், நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு, ஏராளமான குளறுபடிகளை உடைய கேள்வித்தாளைக் கொண்டு நடந்த குரூப் - 4 தேர்வை, கோர்ட் ரத்து செய்ய வேண்டும்; புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என, வாதிட்டார். இதைத் தொடர்ந்து, கோர்ட்டின் அடுத்த உத்தரவு வரும் வரை குரூப் - 4 தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.