முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

கடினமான தேர்வு இது: டி.இ.டி., தேர்வு எழுதியவர்கள் புலம்பல்


சென்னை: டி.இ.டி., தேர்வு, எதிர்பார்த்ததை விட மிகக் கடினமாக இருந்ததாகவும், முதல் தாள் தேர்வுக்கான கேள்விகள், பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படவில்லை என்றும், கணிதக் கேள்விகள், விடை அளிக்க முடியாத அளவிற்கு கடினமாக இருந்ததாகவும், தேர்வர் பலரும் புலம்பினர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல் முறையாக நேற்று, ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (டி.இ.டி.,) நடந்தது. காலையில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடந்தன. 1,027 மையங்களில் நடந்த தேர்வில், 6.56 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியை எதிர்நோக்கி உள்ளவர்கள், தேர்வில் பங்கேற்றனர். இதையொட்டி, அனைத்து வகை பள்ளிகளுக்கும், நேற்று விடுமுறை விடப்பட்டது. காலை 10.30 மணி முதல், 12.00 மணி வரை, முதல் தாள் தேர்வு நடந்தது. சென்னையில், 78 மையங்களில் தேர்வுகள் நடந்தன.

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வை முடித்து வெளியே வந்த தேர்வர்களிடம், "தேர்வு எப்படி இருந்தது?' என கேட்டது தான் தாமதம்; ஆளாளுக்கு புலம்பித் தள்ளினர். ஒருவர் கூட, "தேர்வு எளிதாக இருந்தது' எனக் கூறவில்லை. "கேள்விகளைப் படித்தபோது, தலை சுற்றியது. பாடப் பகுதிகளுக்கும், கேட்ட கேள்விகளுக்கும் சம்பந்தமே இல்லை. கணிதத்திற்கு 30 கேள்விகள்; 30 மதிப்பெண்கள். இதற்கு, ஒவ்வொரு கேள்விக்கும், உடனடியாக விடையை அளிக்க முடியவில்லை. கணக்கு போட்டுப் பார்த்து, விடை அளிப்பதற்கு நேரம் போதவில்லை. இப்படி கேள்வி கேட்டால், ஒன்றரை மணி நேரத்தில் எப்படி தேர்வெழுத முடியும்?' என்று பலரும் தெரிவித்தனர்.

எதற்கு இந்த தேர்வு? "ஏற்கனவே இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படித்து முடித்து, அரசு சான்றிதழும் பெற்றிருக்கிறோம். அதன் பிறகும், எதற்கு இந்த தேர்வு? ஒவ்வொரு தேர்வரிடம் இருந்தும், தலா, 500 ரூபாயை, தேர்வுக் கட்டணமாக வசூலித்திருக்கின்றனர். இந்த வகையில், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கிறது' என, சிலர் கூறினர். சென்னை அல்லாத பிற நகரங்களில் தேர்வெழுதியவர்களும், "கணிதம் கசக்க வைத்தது; நேரம் போதவில்லை' என்ற கருத்தையும், ஒட்டுமொத்த அளவில், தேர்வு எளிதாக இல்லை என்ற கருத்தையும் தெரிவித்தனர். மதுரை, கோவை உள்ளிட்ட சில இடங்களில், வெகு சிலரே, தேர்வு எளிதாக இருந்தது எனக் கூறினர். ஆனால் அவர்களும், கணிதக் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலவில்லை என்ற கருத்தை தெரிவித்தனர். மொத்தத்தில், 5 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு பெறலாம் என்று எதிர்பார்ப்பதாக, தேர்வு எழுதியவர்கள் கருதுகின்றனர். தேர்வைப் புறக்கணித்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரம், இன்று தெரியும்.

நியாயமாக நடக்கிறது: அமைச்சர் திருவல்லிக்கேணி, என்.கே.டி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வை, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, துறை முதன்மை செயலர் சபிதா, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, அமைச்சர், நிருபர்களிடம் கூறும் போது, ""முதல்வர் உத்தரவுப்படி, டி.இ.டி., தேர்வு நியாயமாக நடக்கிறது. 6.56 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்,'' என்றார். ""காலையில் நடந்த தேர்வு கடினமாக இருந்தது என்றும், பாடத் திட்டத்தின்படி கேள்விகள் கேட்கவில்லை என்றும் தேர்வர் புகார் கூறியுள்ளனரே?'' என்று கேட்டதற்கு, ""தகுதியான ஆசிரியரை தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்,'' என, அமைச்சர் சிவபதி பதிலளித்தார்.

30 மதிப்பெண்கள் "அவுட்!' கணிதப் பாடத்திற்கு, 30 மதிப்பெண்களுக்கு, 30 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும், படிப்படியாக பல நிலைகளில், ஒரு பக்கம் அளவிற்கு போட்டுப் பார்த்த பிறகே, விடையைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு இருந்ததாக, சென்னையில் தேர்வெழுதிய தேர்வர் தெரிவித்தனர். ஒரு கேள்விக்கு விடை அளிக்க, எவ்வளவு நேரமாகும் என்பதை, டி.ஆர்.பி., கணக்கிடாமல், எப்படி கேட்டனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இத்தேர்வு, ஆசிரியர் மத்தியிலும், ஆசிரியர் வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் மத்தியிலும், பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வுக்கு 90 நிமிடம் தந்த முரண்பாடு ஏன்? அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான, 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, மே 27ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வை நடத்தியது. இத்தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதினர். இத்தேர்வு, காலை 10 முதல், பகல் 1 மணி வரை, மூன்று மணி நேரம் நடந்தது. மொத்த மதிப்பெண்கள், 150. இந்த ஆசிரியருக்கான அடிப்படைச் சம்பளம் அதிகம்; அத்துடன், இவர்கள் மேல்நிலை வகுப்புகளுக்கு, பாடம் எடுக்கக் கூடியவர்கள். இவர்களுக்கான தேர்வும் கடினமாக இல்லை; நேரமும் குறையவில்லை.

ஏன் இந்த முரண்பாடு? ஆனால், நேற்று காலையில் நடந்த, டி.இ.டி., முதல் தாள் தேர்வு, ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய, சாதாரண இடைநிலை ஆசிரியர்களுக்கானது. பிற்பகலில் நடந்த இரண்டாம் தாள் தேர்வு, பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய, பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. இந்த இரு தேர்வுகளுக்கும், முதுகலை ஆசிரியர் தேர்வைப்போல், அதே, 150 மதிப்பெண்கள் தான். ஆனால், நேரம் மட்டும், 50 சதவீதம் குறைத்து வெறும், ஒன்றரை மணி நேரம் மட்டும் வழங்கப்பட்டது. இது எந்த வகையில் நியாயம் என, நேற்று பல தேர்வர்கள் கேள்வி எழுப்பினர். நேற்று இரு தேர்வுகளையும் எழுதிய தேர்வர்களுக்கு, கேள்வித்தாள் கடினம் ஒரு பக்கம் என்றாலும், மிக முக்கியமாக, நேரமின்மை தான் பெரும் பிரச்னையாக இருந்தது.

தேர்வு வாரியம் பதில்: தேர்வு நேரத்தில் உள்ள முரண்பாடு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் கூறியதாவது: இந்த கால நேரத்தை, நாங்கள் நிர்ணயிக்கவில்லை. நடைமுறை ரீதியாக, தேர்வர்களுக்கு உள்ள இந்த பிரச்னையை உணர்கிறோம். அவர்களது கேள்வி நியாயமானது தான். குறைந்தபட்சம், இரண்டு மணி நேரமாவது வழங்கியிருக்க வேண்டும். ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் (என்.சி.டி.இ.,) ஆசிரியர் தேர்வுக்கான விதிமுறைகளில், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, மூன்று மணி நேரம் வழங்க வேண்டும் என உள்ளது. அந்த விதிமுறையைப் பின்பற்றி தான், டி.இ.டி., தேர்வர்களுக்கு ஒன்றரை மணி நேரம் வழங்கினோம். இதில், எங்களை குறை கூற முடியாது. ஆனால், இந்தத் தேர்வில் கிடைத்த சில அனுபவங்களைக் கொண்டு, குறைகளை, அடுத்த தேர்வில் களைவதற்கு நடவடிக்கை எடுப்போம். மேலும், இந்த நேர பிரச்னையும் கவனத்தில் கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.