வேலூர்: ஆற்காட்டில், நள்ளிரவு 12.30 மணிக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தையை பெற்ற பெண், 10 மணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினார்.
தமிழகம் முழுவதும், ஆசிரியர் தகுதி தேர்வு, நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில், 53 மையங்களில், 42 ஆயிரத்து, 209 பேர் தேர்வு எழுதினர். வேலூர் கல்வி மாவட்டத்தில், முதல் தாள், 13 ஆயிரத்து, 825 பேரும், இரண்டாவது தாள், 14 ஆயிரத்து, 863 பேரும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில், முதல் தாள், 6,863 பேரும், இரண்டாம் தாள், 6,658 பேரும் எழுதினர். முதன்மை கல்வி அலுவலர் பொன் குமார் தலைமையில், 53 தலைமை கண்காணிப்பாளர்களும், 1,500க்கும் மேற்பட்ட பணியாளர்களும் தேர்வை கண்காணித்தனர். ஆற்காட்டை சேர்ந்த குமாரி என்ற பெண்ணுக்கு, நேற்று, அங்குள்ள தனியார் மருத்துவமனையில், நள்ளிரவு 12.30 மணிக்கு, சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை எடுத்துக் கொண்டு அவரது தாய் லட்சுமியுடன், காலை 9.45 மணிக்கு வேலூர் செயின்ட் மேரீஸ் பள்ளிக்கு தேர்வு எழுத வந்தார். காலை 10 மணிக்கு துவங்கிய தேர்வை எழுதினார். அவர் தேர்வு எழுதும் வரை, தாய் லட்சுமி காரில் குழந்தையுடன் காத்திருந்தார்.