குழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு
ஒரு குழந்தை கல்வி கற்பதை, பெற்றோர்கள் அடிக்கடி, பள்ளியுடன் தொடர்புபடுத்துகின்றனர். ஏனெனில், பள்ளி செல்லும் வயதை அடைந்தவுடனேயே, குழந்தைகள், கல்வியறிவை பெற தயாராகி விடுகிறார்கள் என்று பெற்றோர்கள் கருதுவதே இதற்கு காரணம். ஆனால், பலரும் உணரத் தவறுவது என்னவெனில், ஒரு குழந்தையின் கற்றல் செயல்பாடானது, அது கருவறையில் இருக்கும்போதே தொடங்கி விடுகிறது என்பதைத்தான்.
கல்வியறிவு என்பதைப் பற்றி நிபுணர்கள் கூறுவதை நாம் இங்கு பார்க்கலாம். ஒருவரின் கல்வியறிவு என்பது பற்றி சுருக்கமாக கூறுவதென்றால், அவர், படித்தல், எழுதுதல் மற்றும் குறியீட்டு அமைப்புகளை பயன்படுத்த தெரிந்திருத்தல் போன்றவையே ஆகும். அதேநேரத்தில், இதையே சற்று விரிவாக கூறுவதென்றால், தகவல்தொடர்பு - பேசுதல் மற்றும் கவனித்தல் ஆகிய செயல்பாடுகளின் அனைத்து அம்சங்களையும் கொண்டது. மேலும் இவற்றில், தொழில்நுட்பம், கணிதஅறிவு மற்றும் கலாச்சார அறிவு போன்றவையும் அடங்கும்.
அதேசமயம், கல்வியறிவு என்பதற்கு அகராதி தரும் அர்த்தம் இன்னும் சற்று வித்தியாசமானது. எழுதுதலும், படித்தலும், பயன்பாட்டுக் கல்வியறிவைக் குறித்தாலும், கல்வியறிவு என்பது, அர்த்தம் உருவாக்குதல், நாம் வாழும் உலகைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளுதல், நாம் என்ன பார்க்கிறோம், படிக்கிறோம் மற்றும் எழுதுகிறோம் என்பதை பிரதிபலித்தல் மற்றும் ஒருவரின் சொந்த இயல்பார்ந்த அறிவுத்திறன் குறித்த சிந்தனையில் ஈடுபடுதல் போன்ற விளக்கங்கள் தரப்படுகின்றன.
நாம் இங்கே, கைக்குழந்தைகள் மற்றும் இளங்குழந்தைகளில், மொழி மற்றும் கல்வியறிவு மேம்பாடு எவ்வாறு நிகழ்கிறது மற்றும் அதுதொடர்பாக, பெற்றோர்களுக்கான ஆலோசனைகள் குறித்தும் விவாதிக்கவுள்ளோம். சுருக்கமாக சொல்வதென்றால், மொழி மற்றும் கல்வியறிவு மேம்பாடு என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
புகழ்பெற்ற ரஷ்ய உளவியல் நிபுணர் வகாட்ஸ்கி என்ன கூறுகிறார் என்றால், "குழந்தைகள் தங்களது கைகளை வெறுமனே இப்படியும், அப்படியும் அசைப்பதானது, ஒரு முக்கியமான செயல்பாடாகும். சத்தங்களை சரமாக கோர்த்து, வார்த்தைகளை உருவாக்கும் பயிற்சியாகும் இது. இந்த செய்கையானது, பிற்காலத்தில், எழுதுதல் மற்றும் புத்தகங்களைப் பிடித்தல் போன்ற கட்டுப்பாடான செயல்பாடுகளுக்கு இட்டு செல்கிறது. மேலும், பேச்சு வடிவங்களில் ஒரு குழந்தை பெறும் நிபுணத்துவமே, அதனுடைய சிந்தனையின் அடிப்படை வடிவங்களாக ஆகின்றன. இதன்மூலம், ஒரு குழந்தையின் பேச்சை, அதன் உள்ளார்ந்த திறன் வளர்ச்சியுடன் சம்பந்தப்படுத்தலாம்" என்கிறார்.
குழந்தையின் மொழித்திறன் வளர்ச்சி என்பது, அதன் பிறப்பிற்கு முன்பே, அதாவது, கருவிலிருந்தே தொடங்குகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். தாயின் கருப்பையில் இருக்கும் ஒரு கருவின் கேட்கும் திறன், 25 வாரங்கள் ஆகும்போது, மேம்படுகிறது. இதன்மூலம், ஒரு குழந்தை, உலகத்திற்குள் வரும் முன்பாகவே, அதைப்பற்றிய விஷயங்களை உள்வாங்குகிறது.
இந்த உலகில் பிரவேசித்த புதிதில், தனது தேவைகளை கேட்க, அழுகை போன்ற முறைகளில் ஒலியெழுப்புகிறது. இதை பெற்றோர்கள், ஒரு யூகமாக புரிந்துகொண்டு வினையாற்றுகிறார்கள். கைக்குழந்தைகளும், சிறு குழந்தைகளும், தங்களது பெற்றோர் பேச்சும் பேச்சுக்களை கூர்மையாக கவனிக்கிறார்கள் மற்றும் மொழியில் பயன்படுத்தப்படும் ஒலிப்புகளையும், ஒலிகளுக்கு இடையிலான வேறுபாடுகளையும் பற்றி புரிந்துணர்வுகளை அவர்கள் மேம்படுத்திக் கொள்கிறார்கள்.
பழக்கமான ஒலிகளையே, ஒரு குழந்தை திரும்ப திரும்ப கேட்கையில், அதற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல், அலட்சியம் செய்கிறது. ஆனால், ஒரு புதிய வகையான ஒலியை எழுப்பும்போது, ஆர்வத்துடன் கவனிக்கிறது மற்றும் அந்த ஒலி வரும் திசையை நோக்கி திரும்பிப் பார்க்கிறது. இதைத்தவிர, சமூக முக்கியத்துவம் பெறும் வகையில், தகவல்தொடர்பு செயல்பாட்டில், முக்கியத்துவம் பெறும் ஒலிகளையும் பிரித்து அறிந்துகொள்கிறது ஒரு குழந்தை.
பிரிண்ட் செய்யப்பட்ட குறிப்புகளை, குழந்தைகள் கிரகித்து, தங்களுக்குள் பதிவுசெய்து கொள்கிறார்கள். ஒரு உள்ளடக்கம் அல்லது பார்முலாவைப் பற்றி பெரியவர்கள், ஒரு குழந்தையிடம் பேசுகையில், அவற்றுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதில் குழந்தைகள் ஈடுபடுகிறார்கள்.
சில நேரங்களில், குழந்தைகள், பேப்பருடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது, அந்த பேப்பரை, கிழித்தோ, அதில் கிறுக்கியோ, அதை நீரில் நனைத்தோ விளையாடுவார்கள். இத்தகைய செயல்பாடுகளின் மூலம், ஒரு பேப்பரின் தன்மைகள் குறித்து அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். மேலும், ஒரு செய்தித்தாளையோ அல்லது பத்திரிகையையோ குழந்தைகளுக்கு படித்துக் காட்டுகையில், குழந்தைகள், அந்த பத்திரிகையை அல்லது செய்தித்தாளை எவ்வாறு பிடித்து, எவ்வாறு வசதியாக அமர்ந்துகொள்வது போன்ற உடல் மொழிகளை கற்றுக்கொள்கிறார்கள்.
மேலும், இடமிருந்து வலமாக படிக்க வேண்டுமா அல்லது வலமிருந்து இடமாக படிக்க வேண்டுமா என்பதை கற்றுக்கொள்வதோடு, பக்கங்களை ஒவ்வொன்றாக திருப்பும் வித்தையையும் கற்றுக் கொள்கிறார்கள். ஒரு வகையில் சொல்வதென்றால், இந்த உலகில், தான் செயல்படுவதற்கான அனைத்துவகை தகவல்கள் மற்றும் திறன்களை ஒரு குழந்தைப் பெற்றுக்கொள்கிறது.
குழந்தையின் மொழி மற்றும் கல்வியறிவு மேம்பாட்டை, பெற்றோர்கள் எந்தளவு சிறப்பாக்க முடியும்?
குழந்தையிடம் பேசுதல்
ஒரு பெண் கருவுற்று இருக்கும்போதே, அவர் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுதல், படித்தல் மற்றும் பாடுதல் போன்ற நடவடிக்கைகள் அவசியம். இதன்மூலம், சம்பந்தப்பட்டவர்களின் குரல்களை, ஒரு குழந்தை, கருவில் இருக்கும்போதே அடையாளம் காணும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். நம் கலாச்சாரத்தில், நிறைமாத கர்ப்பிணிகளுக்கு நடத்தப்படும் வளைகாப்பு நிகழ்ச்சியானது, குழந்தையின் கேட்கும் திறனை மேம்படுத்தும் செயல்பாட்டிற்கான ஒரு சிறந்த உதாரணம்.
தொடுதல் அனுபவம்
தொடுதல் மற்றும் உணர்தல் அனுபவங்களை, குழந்தைகளுக்கு வழங்குதல் மிகவும் முக்கியம். உதாரணமாக, சமையலறையில் சில பாதுகாப்பான பொருட்களை தொட குழந்தைகளை அனுமதிக்கலாம் மற்றும் மல்லிகை போன்ற மலர்களை முகர்ந்து பார்த்து அடையாளம் காணச் செய்து, அவர்களின் நுகர்தல் திறனை அதிகரிக்கலாம்.
உச்சரிப்பு(phonemic) தொடர்பான விழிப்புணர்வு
குழந்தையிடம், பேசுதல், படித்துக் காட்டுதல் மற்றும் பாடுதல் மிகவும் முக்கியம். மேலும், பெற்றோர்கள், sound games உள்ளிட்டவைகளையும் விளையாடுவது அவசியம். வெவ்வேறு விலங்குகள் மற்றும் பறவைகள் எவ்வாறு சத்தம் எழுப்புகின்றன என்ற அறிவை குழந்தைகளுக்கு புகட்டுவதும் அவசியம்.
சுற்றுச்சூழல் கற்பிதம்
ஒரு குழந்தை அன்றாடம் பார்க்கும் நிகழ்வுகள் சம்பந்தப்பட்டதாகும் இது. உதாரணமாக, குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் மற்றும் அவர்களுக்கான பால்புட்டிகள் மற்றும் இதர உணவு டப்பாக்கள் ஆகியவற்றில் ஒட்டப்பட்ட லேபிள்கள் போன்றவை முக்கியமானவை. பெற்றோர்கள், இவற்றை படித்துக்காட்டி, அதுதொடர்பான விழிப்புணர்வை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
உரையாடுதல்
குழந்தைகளுடன் உரையாடுதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். உதாரணமாக, குழந்தையை குளிப்பாட்டுகையில், சோப்பு மற்றும் ஷாம்பு பற்றியோ, அதன் வாசனைப் பற்றியோ, நீரின் கொதிநிலைப் பற்றியோ அவர்களுடன் பேசலாம். அதேசமயம், இதற்கு, அவர்களுடைய பதிலுக்கும் நீங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும். குளிக்கும்போது மட்டுமின்றி, அதைப்போன்ற ஒவ்வொரு தருணத்திலும், குழந்தையிடம், உங்களின் வேலையை செய்து கொண்டே, அதைப்பற்றி பேசலாம்.
ஒரு குறிப்பிட்ட பொருளை சுட்டுதல்
குழந்தையிடம் நீங்கள் இருக்கும்போது, நீங்கள் இருவரும் எதிரே பார்க்கும் விஷயத்தைப் பற்றி, அதன் பெயர், நிறம், அம்சம், அளவு மற்றும் வடிவமைப்பு குறித்து குழந்தைக்கு விளக்கலாம். இதன்மூலம், குழந்தையின் அறிவு விரிவடைகிறது.
பாடல் மற்றும் விரல் விளையாட்டு
குழந்தைகளுக்கு, பாடல்களையும், நகர்வுகளையும் சொல்லித் தருவதன் மூலம், அவர்களின் வார்த்தை வள(vocabulary) அறிவு, மொழியறிவு மற்றும் மோட்டார்(motor) திறன்கள் போன்றவை மேம்படுகின்றன.
வார்த்தை வளம்
ஒரு சராசரி குழந்தை, தனது முதல் பிறந்தநாளின்போது, குறைந்தபட்சம் 50 வார்த்தைகளை தெரிந்திருக்கும். இந்த எண்ணிக்கை, 2ம் வருடத்தில் 300ஐ தொடும். எனவே, வார்த்தை வளத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான சூழலை உருவாக்குவது, ஒரு குழந்தையின் மொழி மேம்பாட்டில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
கட்டுரையாளர்
பேராசிரியர். வித்யா திருமூர்த்தி
பசிபிக் லூத்ரன் பல்கலைக்கழகம்
அமெரிக்க ஐக்கிய நாடுகள்