முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

அரசு, மாநகராட்சி பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை மந்தம்


அரசு, மாநகராட்சி பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை மந்தம்

 நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையில் வழக்கம் போல் 20 சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகளே மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். மாணவர் சேர்க்கை யை மேலும் தீவிரப்படுத்த பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இந்தாண்டு பள்ளி மாணவர் சேர்க்கை இலக்கு 100 சதவீதம் எட்டவேண்டும் என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைக ளையும் பள்ளியில் சேர்க்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு  4 செட் இலவச சீருடை, காலணி, அனைத்து மாணவர்களுக்கும் புத்தக பை, கணித உபகரண பெட்டி, வண்ண பென்சில், வரைபட புத்தகம், நோட்டு புத்தகங்கள், ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டள்ளது.கோவை மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் 1142 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு இப்பள்ளிகளில்  1 லட்சத்து 27 ஆயிரத்து 614 பேர் பயின்றனர். முதல் வகுப்பில் மட்டும் கடந்த ஆண்டு புதிதாக 17 ஆயிரத்து 88 பேர் சேர்ந்தனர். இது தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவே. 
நடப்பு ஆண்டில் பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்தது முதல் பள்ளி கல்வித்துறை அறிவிப்பின்படி ஆசிரியர்கள் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி, நேரடியாக மக்களை சந்தித்து நலத்திட்டங்களை எடுத்துரைத்தல், குடியிருப்பு பகுதிகளில் பள்ளி வயது மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனரா என்று கண்காணித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர். இருப்பினும் பெரிய அளவில் மாணவர்கள் சேர்க்கையில் மாற்றங்கள் இல்லை என்று தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
 மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க கல்வி அதிகாரிகளின் அறிவுரைப்படி பல்வேறு செயல்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டது. மாணவர்கள் சேர்க்கை பெரிதாக அதிகரிக்கவில்லை. முதல் வகுப்பில் அதிகபட்சம் 30லிருந்து 35 மாணவர்களே சேர்ந்துள்ளனர். சில பள்ளிகளில் சராசரியாக 25 மாணவர்களே சேர்ந்துள்ளனர். ஒட்டு மொத்தமாக ஒப்பிடுகையில் 20 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்கள் தான் சேர்ந்துள்ளனர் என்று மாநகராட்சி, அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர், குடிசை பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் தான் அதிகமாக சேர்ந்துள்ளனர். 
ஓரளவு பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பத்தினர் பெரும் பாலும் ஆங்கில வழி பள்ளிகளில் தான் குழந்தைகளை சேர்க்கின்றனர்.  ஆகஸ்ட் மாதம் வரை சேர்க்கைகள் நடைபெறும். மேலும் வெளியூரில் இருந்து வருபவர்கள் இனிமேல் குழந்தைகளை சேர்க்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு தலைமையாசிரியர்கள் கூறினர்.
தொடக்க கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘‘அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்க கவனம் செலுத்தப்படுகிறது. தனியார் பள்ளிகள் பெருகியுள்ள சூழலில் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும்,’’ என்றனர்.