பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அனைத்துப் பாடங்களுக்குமான மறுகூட்டல் விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 5) முதல் வியாழக்கிழமை (ஜூன் 7) வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்கள் (சென்னை நீங்கலாக) இந்த விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
சமச்சீர் பாடத் திட்டத்தின் கீழ் மொழி மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு மறுகூட்டலுக்கான கட்டணம் ரூ.305 ஆகும். பிற பாடங்களுக்கான மறுகூட்டல் கட்டணம் ரூ.205 ஆகும்.
இந்தக் கட்டணத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் கருவூல செலுத்துச்சீட்டின் மூலம் செலுத்தி அதற்கான ரசீதை இணைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சிறப்பு துணைத் தேர்வு: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். பள்ளிகளின் மூலம் தேர்வு எழுதியவர்கள், அந்தந்த பள்ளிகளிலேயே இதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். செவ்வாய்க்கிழமை (ஜூன் 5) முதல் வியாழக்கிழமை (ஜூன் 7) வரை இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளிகளிலேயே ஜூன் 7-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியரிடம் பணமாகச் செலுத்த வேண்டும். தனித் தேர்வர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள், மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.