முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

கற்றலில் புதுமை படைத்த ஆசிரியர்கள்!


தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தலில் புதுமை செய்த ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கி கௌரவித்துள்ளார். அகில இந்திய அளவில் இந்த விருது பெற்ற ஏழு ஆசிரியர்களில் நான்கு பேர் தமிழக ஆசிரியர்கள்.

மனப்பாடப் பாட்டை மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக, மெட்டு அமைத்து அந்தப் பாட்டைக் கேட்டால் எப்படி இருக்கும்? அதுவும், மொபைல் போனில் கேட்டால் எப்படி இருக்கும் அல்லது சிடியில் பதிவு செய்து கேட்டால் எப்படி இருக்கும்? இந்தச் செய்தியைக் கேட்கவே இனிமையாக இருக்கிறதல்லவா? இது போன்ற முயற்சியை எங்கு செய்கிறார்கள்? நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறது சென்னையை அடுத்துள்ள அஸ்தினாபுரத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி. ஆசிரியர் பாடிக் காட்டிய பாடல்களை சிடியில் வீட்டுக்குக் கொண்டு போய் கேட்டு, மனப்பாடப் பாடல்களை எளிதாக மனப்பாடம் செய்கிறார்கள் இங்குள்ள மாணவர்கள். இந்தப் பள்ளி மாணவர்கள்,சுற்றுச்சூழல் சம்பந்தமான அல்லது வரலாறு சம்பந்தமான விஷயங்களை பவர் ஞி செய்து காட்டுகிறார்கள். மைக்ரோசாஃப்ட்டின் ஆட்டோ கொலஜ்ஜை பயன்படுத்தி படங்களை வெட்டியும் ஒட்டியும் புதுமை செய்கிறார்கள்.

சாங் ஸ்மித் சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி, ஆங்கிலப் பாடத்தில் உள்ள பாடல்களுக்கு இசை அமைக்கிறார்கள். இப்படி பாடங்களைப் படிக்க, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மாணவர்களுக்குக் கற்றலை இனிமையாக்கி வருகிறார் ஆசிரியை சித்ரா. அத்துடன் மாணவர்களுக்கு பாடங்களை கரும்பலகையில் எழுதிக் காட்டுவதுடன் நின்றுவிடுவதில்லை. “வீடியோ மூலமும், பவர் பாயிண்ட் மூலமும் பாடங்களை நடத்துவதால் மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்தத் தொழில்நுட்பத்தை மாணவர்களும் கற்றுக் கொள்கிறார்கள். இப்படி தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடம் நடத்தியதற்காக அரசுப் பள்ளி ஆசிரியை சித்ராவுக்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் ஐசிடி விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவில் உலக அளவிலான ஆசிரியர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவன அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்று வந்த பெருமை பெற்றவர். அரசுத் துறை வழங்கிய பயிற்சி மட்டுமல்லாமல், 2010ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய மாநாட்டில் கிடைத்த அனுபவங்களையும் வகுப்பறையில் பயன்படுத்தத் தயங்காதவர் இவர்.

தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகளில் சிறப்பாகச் செயல்படும் பள்ளி ஆசிரியர்கள் அகில இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்கள். ஐசிடி விருது பெற அகில இந்திய அளவில் ஏழு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் இந்த கௌரவத்தைப் பெற்றிருக்கிறார்கள். இந்த கௌரவத்தைப் பெற்றுள்ள மற்றொரு ஆசிரியர் ஜி. பெர்ஜின், நாகர்கோவிலில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார், ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை கணக்குப் பாடங்களைக் கற்பிப்பதற்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறார். இதனால், கணக்கு என்றால் மாணவர்களுக்கு வேம்பாகக் கசக்காமல் இனிக்கிறது. தகவல் தொழில்நுட்ப உதவியுடன் இவர் உருவாக்கிய பாடங்களை 25 பள்ளிகளில் செயல்படுத்தி இருக்கிறார். நாகர்கோவிலில் காதுகேளாதோர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களை அனிமேஷன் முறையில் கற்றுத் தருகிறார். இதனால், அறிவியல் கோட்பாடுகளை காதுகேளாத மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள். ‘இதுதான் எனது முயற்சிக்குக் கிடைத்த சிறிய வெற்றி’ என்கிறார் பெர்ஜின். நாகர்கோவிலில் பகல் நேரப் பாதுகாப்பு மையத்தில் மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு புதிய தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாடம் நடத்தி வருகிறார். இவரும் 2010ஆம் ஆண்டில் மைக்ரோ சாப்ட் நிறுவன அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்று வந்த ஆசிரியர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 2007ஆம் ஆண்டு பிரேசிலில் நடத்திய ஆசிரியர் மாநாட்டில் பங்கேற்ற நாகர்கோவில் ஸ்ரீமூலம் ராமவர்மா மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கோகிலா, தேசிய அளவில் ஆசிரியர் விருது பெற்றவர். செரிமான முறைகள் பற்றி அனிமேஷன் மூலம் மாணவர்களுக்கு எளிமையாக அவர்களே புரிந்துகொள்ளும் வகையில் பாடம் கற்பித்து வருகிறார். புவி வெப்ப உயர்வைத் தடுக்கும் உத்திகள், மண் புழு உரம், மூலிகைத் தோட்டம் போன்ற திட்டங்களை மாணவர்களைக் கொண்டு பள்ளியில் செயல்படுத்தி வரும் அவர், அதனை கம்ப்யூட்டர் மூலம் மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்தி வருகிறார். தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாடம் நடத்த, பள்ளி நிர்வாகம் ஊக்கம் கொடுத்து வருவதைக் குறிப்பிடும் அவர், எதிர்காலத்தில் இந்தப் பள்ளியையே ஸ்மார்ட் ஸ்கூலாக மாற்ற வேண்டும் என்ற தனது விருப்பதையும் வெளிப்படுத்தினார். அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றதைத் தொடர்ந்தே, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்றலில் புதுமை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

சென்னை ஐஐடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக இருக்கும் லதா ராமச்சந்திரன், கும்பகோணம் கார்ப்பரேஷன் பள்ளியிலும் பின்னர் அரசுக் கல்லூரியிலும் படித்து விட்டு, ஆசிரியர் பணிக்கு வந்தவர். 2008-ல் குடியரசுத் தலைவரிடமிருந்து நல்லாசிரியர் விருது பெற்றவர்.  மாணவர்களுக்கு பாடங்களை மட்டுமல்ல, வாழ்க்கைக் கல்வியையும் கற்றுத் தர வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கும் அவர், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களைக் கற்றுத் தருகிறார். “சுனாமி ஏற்பட்டபோது கல்பாக்கத்தில் தங்களது குடும்பத்தில் சோகத்தைச் சந்தித்த இரண்டு குழந்தைகள் எங்களது பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார்கள். சுனாமிக்குப் பிறகு, தண்ணீர் என்றாலே அவர்களுக்கு அலர்ஜி. அதனால், தினந்தோறும் குளிக்கக்கூட பயம். அந்தக் குழந்தைகளைப் பார்த்தபோதுதான், அதுமாதிரிக் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையூட்ட தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாமே என்ற யோசனை வந்தது. பேரிடர் மேலாண்மை குறித்த தகவல்களை மாணவர்களைக் கொண்டே திரட்டி தனியாக நிகழ்ச்சியைத் தயாரித்தோம். பேரிடரைத் தடுப்பது எப்படி? வந்தால் சமாளிப்பது எப்படி? இப்படி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் எனது நிகழ்ச்சி இருந்தது. மாணவர்களை  ஈடுபடுத்தி உருவாக்கப்பட்ட இந்தத் தயாரிப்பும் நான் விருது பெற முக்கியக் காரணம்” என்கிறார் லதா ராமச்சந்திரன்.

கற்றலில் புதுமை படைத்த இந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று ஐசிடி விருதுகளை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. விருது பெறும் இந்த ஆசிரியர்களுக்கு வெள்ளிப் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பம் உள்பட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தும் இந்த ஆசிரியர்களுக்கு லேப்டாப்பும் பரிசாக வழங்கப்பட்டது. பள்ளிக் கட்டமைப்பு வசதிகளைவிட, ஆசிரியர்கள் மேலானவர்கள்தான். இந்த முன்மாதிரி ஆசிரியர்கள் வகுப்பறைகளில் புதுமையைப் புகுத்திப் படிப்பதை மாணவர்களுக்கு இனிமையாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


கற்றலில் இனிமை எப்போது?

 “குழந்தைகளுக்குப் பிடித்தமான ஆயிரக்கணக்கான விஷயங்களை - மண்ணில் இருக்கும் பூச்சி புழுக்களிலிருந்து, வானத்திலிருக்கும் நட்சத்திரங்கள் வரை - வகுப்பறைக் கல்விக்கு ஏற்றதல்ல என்ற நம் நாட்டில் நிலவிய கல்வி முறை கருதி வந்தது. தனக்குக் கொடுக்கப்பட்ட பாடப்புத்தகத்திலிருந்துதான் கற்பிக்க வேண்டும். குழந்தைகளைப் பரீட்சைகளுக்குத் தயார் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே சராசரி ஆசிரியர் எவரும் வேலை செய்கிறார். குழந்தையின் அறிந்து கொள்ளும் ஆர்வத்துக்கு தீனி போட்டு வளர்க்க வேண்டும் என்பது தனது கடமை என்று எந்த ஆசிரியரும் கருதவில்லை. அப்படி எண்ணினாலும், அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்குரிய சூழ் நிலையை பள்ளிகள் கொண்டிருக்க வில்லை.”

 - குஜராத்தி மொழியில் 1939-ல் வெளியான, ‘திவசப்னா’ (பகல் கனவு) என்று நூலுக்கு எழுதிய முன்னுரையில் பேராசிரியர் கிருஷ்ணகுமார்