இளைஞர்கள் தோல்வி மனப்பான்மையை தோல்வியுறச் செய்து, வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று, குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பேசினார்.
கோவை அரிமா சர்வதேச சங்கம் (மாவட்டம் 324 பி5) சார்பில் சேவைத் திட்ட தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்னூர் அருகே உள்ள குப்பேபாளையத்தில் பல்நோக்கு கிராம சுகாதார மையம் ரூ. 60 லட்சம் செலவில் அமைக்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்து குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மேலும் பேசியது:
அரிமா சர்வதேச சங்கம் சார்பில் பல்வேறு சமூகநலத் திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஒரே நாளில் 34.5 லட்சம் மரங்கள் நடப்பட்டு சாதனை செய்யப்பட்டது பாராட்டுக்குரியது.
நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஏழை மக்களுக்கு சலுகைக் கட்டணத்தில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு செய்யும் கருவி ரூ. 10 லட்சத்தில் வழங்கப்பட உள்ளது. இதற்கு நடமாடும் சிறுநீரக ரத்த மாற்றுக் கருவி வழங்குவதன் மூலம் மருத்துவமனை வர இயலாத வயதானவர்களுக்கு வீட்டிலேயே நேரில் சென்று சிகிச்சை அளிக்க முடியும்.
ஒவ்வொருவரும் 10 மரங்களையாவது நட்டு முறையாகப் பராமரிக்க வேண்டும். இதன்மூலம் பசுமையான சமுதாயத்தைப் படைக்க முடியும் என்றார்.
குப்பேபாளையத்தில் ரூ. 18 லட்சத்தில் செயற்கை உறுப்புகள் தயாரிப்பு வசதி மையத்தை அவர் தொடங்கிவைத்தார். கோவை அரசு மருத்துவமனைக்கு ரூ. 30 லட்சத்தில் கேஸ்ட்ரோ எண்டோஸ்கோபி குடல் நோய் மருத்துவ கருவியை அப்துல் கலாம் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புற அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ. 3 லட்சத்தில் தானியங்கி சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திர சேவை என சுமார் ரூ. 1.21 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
சாதனையாளர் விருது: இத்துடன் தொழிலதிபர் ஓ.ஆறுமுகசாமி மற்றும் அரோமா பொன்னுசாமி ஆகியோருக்கு சாதனையாளர் விருதை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் அரிமா சர்வதேச சங்கத்தின் மாவட்ட ஆளுநர் மனோகரன், முன்னாள் சர்வதேச இயக்குநர் ஜி.ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.