சிறப்பு பிஎட் பட்டதாரிகள் சங்க மாநில தலைவர் வடிவேல் முருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,''மனநலம் பாதித்த, பார்வையற்ற, கேட்கும் திறனற்ற, போலியோ தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி கற்பிக்கும் தகுதி உடைய சிறப்பு பிஎட் பட்டதாரிகள் ஏராளமானோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பாடம் கற்பிக்க சிறப்பு பாடம் படித்த ஆசிரியர்கள் இல்லை. பொது பிஎட் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. சிறப்பு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை.
பொது பிரிவு ஆசிரியர் பணியிடங்களில் சிறப்பு பிஎட் முடித்தவர்களை நியமிக்கலாம் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறைந்த பட்சம் 2 பணியிடத்தை உருவாக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2010 கணக்கெடுப்பில் 93,289 மாற்றுத் திறனாளிகள் கல்வி நிலையம் சென் று வருகின்றனர். இவர்களுக்கு பாடம் கற்பிக்க சிறப்பு ஆசிரியர்கள் இல்லை. எனவே, சிறப்பு பிஎட் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தை உருவாக்கி, அதில் எங்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ராமசுப்பிரமணி, பதில் அளிக்க உயர் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.