பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள், கொண்டு வரும் பணி தீவிரமாக நடக்கிறது. ஜன., முதல் வாரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகம் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில், அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், ஜூன் முதல் செப்., மாதம் வரை முதல் பருவமும், அக்., முதல் டிச., மாதம் வரை இரண்டாம் பருவமும், ஜன., முதல் ஏப்., மாதம் வரை மூன்றாம் பருவமும் நடக்கிறது.
தற்போது, இரண்டாம் பருவம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. வரும் 19ம் தேதி முதல், அரையாண்டு தேர்வு துவங்குகிறது. இந்த தேர்வு விடுமுறை முடிந்தவுடன், வரும் ஜன., மாதம் முதல் மூன்றாம் பருவம் துவங்கவுள்ளது. இதற்கான, பாடப்புத்தக எண்ணிக்கை குறித்து பள்ளி வாரியாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள், அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது. அரையாண்டு தேர்வு விடுமுறையில், மாவட்ட குடோனில் இருந்து பகுதிவாரியாக புத்தகம் கொண்டு வந்து இருப்பு வைக்கப்படவுள்ளது.
அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் புத்தகம் வந்தவுடன், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் புத்தகம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதில், மாவட்ட கல்வி அலுவலகத்தின் கட்டுபாட்டில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தனியாகவும், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு தனியாகவும் பாடப்புத்தகம் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்படவுள்ளன.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகம் தயார் நிலையில் உள்ளது. விரைவில், புத்தகம் கொண்டு வரப்பட்டு, இருப்பு வைக்கப்படும். புத்தகம் சரிபார்க்கப்பட்டு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படும். அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படும். இதற்கிடையில், எஸ்.எஸ்.ஏ., சார்பில் ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.