தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறையில் சுமார் 72 மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.), மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் இப்போது உயர் நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பள்ளிகளை ஆய்வு செய்தல், நலத்திட்ட உதவிகளை வழங்குதல், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை நிர்வகித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்படுவதாக தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் பள்ளிகளுக்கு முழுமையாகச் சென்றடையவும், அடுத்த ஆண்டு பொதுத்தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறவும் இந்தப் பணியிடங்களில் உடனடியாக தகுதியுள்ள தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் என அனைத்துப் பணியிடங்களும் இந்த ஆண்டு முதன் முறையாக நிரப்பப்பட்டுள்ளன.
ஆன்-லைன் கலந்தாய்வு, அனைத்துப் பணியிடங்களையும் நிரப்பியது போன்ற நடவடிக்கைகள் பாராட்டைப் பெற்றுத் தந்த நிலையில், மாவட்டக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் மாநிலம் முழுவதும் 66 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 145-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள், அதே நிலையிலான மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.
மாவட்டக் கல்வி அலுவலர்களில் 35 சதவீதம் பேர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களிலிருந்தும், 40 சதவீதம் பேர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களிலிருந்தும், 25 சதவீதம் பேர் நேரடியாகவும் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
பணி ஓய்வு, நேரடி பணி நியமனம் இல்லாதது போன்ற காரணங்களால் 35-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஜூன் மாதத்திலேயே காலியாக இருந்தன.
கடந்த 6 மாதங்களில் பணி ஓய்வு பெற்றவர்கள், 25-க்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு போன்ற காரணங்களால் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளன.
பெரம்பலூர், பெரியகுளம், உத்தமபாளையம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, தேவக்கோட்டை, பழனி, திருநெல்வேலி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் உள்பட மொத்தம் 72 காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு மேல்நிலை, உயர் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிரந்தர பொறுப்பு வழங்கப்படாததால் நிர்வாக முடிவுகளை எடுப்பதில் சிரமம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
ஒரு மாவட்டத்தில் 200-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் இருந்தால், அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளை மாவட்டக் கல்வி அலுவலர்தான் மேற்பார்வையிட வேண்டும். ஆய்வுப் பணிகள் கடந்த 2 மாதங்களாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான பொறுப்பு அதிகாரியாகவும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உள்ளனர். இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம், கடன் வழங்குதல், புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட பெரும்பாலான பணிகளும் தொய்வடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
"இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்குத் தகுதியான தலைமையாசிரியர்களின் பட்டியலும் அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால், அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்பட்ட நிலையில் தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது' என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறினார்.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேலும் பலர் ஓய்வுபெற உள்ள நிலையில் இந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
காரணம் என்ன? மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்குவதில் விகிதாசார சிக்கல் உள்ளது.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்ட பிறகு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பணியிடங்களை நிரப்பலாமா என்று அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு விரைவில் சுமுகமான தீர்வைக் காண்பதோடு, மாவட்டக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் கோருகின்றனர்