கூட்டல், பெருக்கல், வகுத்தல் இப்படி எந்தக் கணக்கு கொடுத்தாலும் அசராமல் கணக்குப் போட்டு அசத்தும் மாணவர்களுக்கு, அவர்களின் திறமையை நாடே கண்டு வியக்க வைக்கவும், அதே நேரத்தில் கணக்குப் பாடத்தில் திறமைமிகு மாணவர்களை சமூகத்திற்கு அடையாளம் காட்டும், கணித ஒலிம்பியாட் போட்டிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய செகண்டரி கல்வி போர்டு என்று அழைக்கப்படும் சி.பி.எஸ்.இ. ஆண்டு தோறும் கணிதப் புலிகளுக்கான கணித ஒலிம்பியாட் போட்டியை நடத்தி வருகிறது. டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறும். இந்த 16வது கணித ஒலிம்பியாட் போட்டியில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் கணித ஒலிம்பியாட் போட்டிக்கு அனுப்பப்படுவார்கள்.
இந்தக் கணித ஒலிம்பியாட் போட்டியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் எந்த ஒரு மாணவரும் விண்ணப்பிக்கலாம். அதேபோல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கணிதத்தில் அதிக திறமை கொண்ட மாணவர்களும் இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்தான். இந்தப் போட்டிக்கான சிறப்பம்சம் என்னவெனில் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் அளிக்கப்படும். இந்தப் போட்டியில் பங்குபெற ஒரு பள்ளியில் ஐந்து மாணவர்களை தேர்வு செய்து அனுப்பலாம். இந்த ஐந்து மாணவர்களுக்கும் கணிதத்தில் திறனறித் தேர்வு நடத்தி, அதில் சிறப்பாக பதிலளித்துள்ளார்களா என்று கவனித்து அனுப்ப வேண்டியது அந்தந்தப் பள்ளிகளின் பொறுப்பு.
இந்த கணிதப் போட்டியில் பங்குபெறும் மாணவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.55 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத் தொகை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் முதல்வரின் மூலமாகவே அனுப்ப வேண்டும். கணித ஒலிம்பியாட் போட்டிக்கான தேர்வு மொத்தம் 3 மணி நேரம் நடத்தப்படும். இந்தப் போட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாக நடைபெறும். கேள்வித்தாள் ஆங்கிலத்தில் இருக்கும். விடைகளை மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும். இந்தத் தேர்வுக்கு குறிப்பிட்ட பாடத்திட்டம் என்று ஏதும் இல்லை. பள்ளியில் படித்த அல்ஜிப்ரா, ஜியோமெட்ரி, அடிப்படை எண் கணிதம், திரிகோணமிதி, அரித்மேட்டிக் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும்.
இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை மத்திய செகண்டரி கல்வி போர்டின் மாநில ஒருங்கிணைப்பாளரை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: அக்டோபர் 10.
விவரங்களுக்கு: http://cbseacademic.in/
இந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், போட்டி சம்பந்தமான விவரங்களைப் பெற தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
The Principal
Chinmaya Vidyalaya Vaduthala, Taylor’s Road Kilpauk,
Chennai-600010, Tamil Nadu
Phone No. 044-26460631, 28363379, 26460722.
Sathya54@gmail.com