முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

விஜயதசமி ஸ்பெஷல்: வீரத்திருநாள் வெற்றி திருநாள்


படகில் பவனி வரும் அம்பாள்: ஆந்திராவின் காவல் தெய்வமாக திகழ்பவள் விஜயவாடா கனகதுர்க்கை. இவள், பர்வதம் மல்லேஸ்வரர் கோயிலில் அருளுகிறாள். சக்திபீடங்களில் இத்தலமும் ஒன்று. முன்னொருகாலத்தில் இப்பகுதியில் தவமிருந்த இந்திரகிலர் என்ற முனிவரை அசுரர்கள் தொந்தரவு செய்தனர். அசுரர்களிடம் இருந்து தன்னை காக்கும்படி இங்கு அம்பிகையை வேண்டி தவமிருந்தார் முனிவர். 
அம்பிகையும் அசுரர்களை அழித்து அவரைக் காத்தருளினாள். அதற்கு நன்றிக்கடனாக குன்று வடிவம் எடுத்து அம்பிகையை தன்மீது தாங்கிக்கொண்டார். பிற்காலத்தில் இந்த குன்று கிருஷ்ணா நதியின் போக்கை தடுத்ததால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே மக்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். அம்பிகையின் வேண்டுகோள்படி குன்றாக இருந்த முனிவர், நதி சீராக செல்வதற்கு வழிவிட்டார். எனவே, இப்பகுதி "பெஜ்ஜவாடா' என்று அழைக்கப்பட்டது. "பெஜ்ஜம்' என்றால் "குகை'. இதுவே மருவி, விஜயவாடா' ஆனது. விஜயதசமியன்று இக்கோயிலில், கனகதுர்க்கையை, படகில் வைத்து, கிருஷ்ணா நதியில் பவனி வரச்செய்கிறார்கள். நதியின் போக்கிற்கு வழிவிட்டதற்கு, நன்றி செலுத்தும்விதமாக இவ்வாறு செய்கிறார்கள்.இவ்விழாவிற்கு "நௌக விஹாரம்' என்று பெயர்.


கருணையுள்ள தேவி:


ரம்பன், கரம்பன் எனும் அசுரர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி, தண்ணீருக்குள்ளும், நெருப்பிலும் நின்று பிரம்மனை நோக்கி தவமிருந்தனர். இவர்களது தவத்தினால் தனது பதவிக்கு ஆபத்து வந்து விடும் என அஞ்சிய இந்திரன், முதலை வடிவம் எடுத்து நீருக்குள் கரம்பனை கொன்று விட்டான். சகோதரனை இழந்த ரம்பன், தன் தவமாவது வெற்றி பெற வேண்டும், இல்லாவிட்டால் உயிர் துறக்க வேண்டும் என்ற வெறியில், தன் தலையை அறுத்து அக்னியில் போட முயன்றான். அப்போது அக்னி பகவான் அவன்முன் தோன்றினார். அவர் ரம்பனின் தவத்தைப் பாராட்டி ""என்ன வரம் வேண்டும்?'' என்றார். ரம்பன், ""யாராலும் அழிக்க முடியாதபடியும், விரும்பிய வடிவங்கள் எடுக்கும்படியும் ஒரு மகன் வேண்டும்,'' என்றான். அக்னி பகவானும் அப்படியே வரமளித்தார். 

மேலும், இந்த வரம் பெற்ற பின், எந்த பெண் வடிவை முதலில் பார்க்கிறாயோ, அவள் மூலம் உனக்கொரு மகன் பிறப்பான் என்றருளினார். அவன் முதலில் பெண் எருமை ஒன்றைப் பார்த்தான். அது கருவுற்றது. எருமையின் வயிற்றில் இருந்து தனக்கு மகன் பிறப்பான் என்று அறிந்த அவன், எருமையை தன்னுடன் அழைத்துச் சென்றான். ஒருநாள் அந்த எருமையை கண்ட மற்றொரு ஆண் எருமை அதனருகில் நெருங்கி வந்தது. ரம்பன் அதனை விரட்ட முயன்ற போது, அது அவனை முட்டிக் கொன்றுவிட்டது. ரம்பனின் உடலை எரித்தபோது, பெண் எருமையும் தீயில் பாய்ந்தது. அப்போது அதன் வயிற்றில் வளர்ந்த சிசு எருமைத் தலையுடன் வெளிப்பட்டது. மகிஷத்தின் (எருமை) மூலம் பிறந்தவன் என்பதால் அவனை, "மகிஷன்' என்று அழைத்தனர். 

இவன் ஏன் எருமை வயிற்றில் பிறந்தான் தெரியுமா?வரமுனி எனும் மகரிஷி, கடுந்தவம் செய்து பல வரங்களைப் பெற்று, ஆணவத்தால், மூத்த முனிவரான அகத்தியரையே அவமதித்தார். அகத்தியர் அவரை எருமையாக பிறக்கும்படி சபித்து விட்டார். வரமுனிவர் மன்னிப்பு வேண்டினார். அகத்தியர், "சாபம் கொடுத்ததை மாற்ற முடியாது. ஆனாலும், எருமையாக பிறக்கும்போது, அம்பிகையின் தரிசனம் கிடைக்கப்பெறுவாய்,' என்றார். 
இந்த வரமுனியே இப்போது மகிஷனாக பிறந்திருந்தார்.கடுந்தவம் செய்த மகிஷன், பிரம்மாவிடம், கருவில் உருவாகாத பெண்ணைத் தவிர, யாராலும் இறப்பு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றான். இதனால் ஆணவம் கொண்டு, தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப்படுத்தினான். 

தேவர்கள் தங்களை காக்கும்படி மும்மூர்த்திகளிடம் வேண்டினர். அவர்கள் தங்களது சக்தியை ஒன்றாக்கி ஒரு பெண்ணைப் படைத்தனர். பேரழகியான அவளுக்கு தேவர்கள் பல ஆயுதங்களைக் கொடுத்தனர்.அவளது அழகு பற்றி அறிந்த மகிஷாசுரன், திருமணம் செய்து கொள்ள விரும்பி தூது அனுப்பினான். அவள் பதிலே சொல்லவில்லை. போரிட்டு அடைய எண்ணி சண்டையிட்டான். அவனை எதிர்த்த அவள், ஒன்பது நாட்கள் சண்டையிட்டாள். பத்தாம் நாளில் அவனை அடக்கி, காலில் போட்டு மிதித்தாள். யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்றிருந்தும், தன்னை அடக்கிய அவளது திருவடிகள் பட்டதுமே அவனுக்கு முற்பிறவி ஞாபகமும், தான் அம்பிகையின் திருவடி தரிசனம் பெற்றுள்ளோம் என்பதும் தெரிய வந்தது. அவளுக்கு கட்டுப்பட்டு அப்படியே காலடியில் கிடந்து விட்டான். கருணையுள்ள அந்த தேவியே "மகிஷாசுரமர்த்தினி' ஆனாள்.மகிஷனை, அம்பிகை அடக்கி வெற்றி வாகை சூடி, வெற்றி நாயகியாக அருள்புரிந்த நாளே விஜயதசமி.

அம்பிகை கொண்டாட்டம் ஏன்:

அம்பிகை, துர்க்கையாக வடிவம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி வாகை சூடியநாளே விஜயதசமி. பெரிய கோயில்கள் மற்றும் வசதிபடைத்தவர்கள் வீடுகளில் கணபதி ஹோமம், சண்டி யாகம், லட்சார்ச்சனை செய்து நவராத்திரி பூஜையை முடிப்பர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இவ்விழா பெரியளவில் கொண்டாடப்படுகிறது. பெருமாள் கோயில்களில் வன்னி மரத்தின் கிளையை வைத்து, பெருமாளை எழுந்தருளச்செய்து பாணம் போடும் நிகழ்ச்சி நடக்கும். விநாயகர் சதுர்த்தியன்று சுவாமியை கடலில் கரைப்பதுபோல, மேற்கு வங்காளத்தில் விஜயதசமியன்று, நவராத்திரி நாட்களில் பூஜை செய்து வழிபட்ட பிரமாண்டமான காளிதேவி சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கின்றனர். 

விஜயதசமி பண்டிகையை மைசூருவில், "தசரா' என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். ராமன், பத்து தலைகளையுடைய ராவணனை வதம் செய்த நாளாக இங்கு விஜயதசமி கொண்டாடப் படுகிறது. எனவே இவ்விழா ஆரம்பத்தில் "தசஹரா' என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. தசஹரா என்றால், "பத்து தலைகளைக் கொய்தல்'. பிற்காலத்தில் இதுவே, "தசரா' என மருவியது. இவ்விழா 16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர்கள் காலத்திலிருந்து கொண்டாடப்படுகிறது.

சிங்க வாகனம்:


அம்பாளின் வாகனம் சிங்கம் (சிம்மம்). சிலர் வாழ்வின் கடைசி வரை திருந்தவே மாட்டார்கள். இவர்களுக்கு பாடம் கற்பிக்க அம்பிகை சிம்மம் கடித்துக் குதறினால் எப்படி ஒரு வலி ஏற்படுமோ, அத்தகைய தண்டனையைத் தருவாள். அது மட்டுமல்ல. சிங்கம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தன் இணையுடன் சேரும். அதுபோல, பந்தபாசங்களைத் துறந்து, பிரம்மச்சரியத்தை அனுஷ்டிப்பவரே, அம்பாளின் திருவடியில் நிரந்தர வாசம் செய்ய முடியும் என்பதையும் இந்த வாகனம் றவலியுறுத்துகிறது.