முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

நினைத்ததை உழைப்பால் சாதிக்கலாம்! விழியின்றி அறிவொளி ஏற்றும் ஆசிரியை


திண்டுக்கல்:"நினைத்ததை உழைப்பினால் சாதிக்கலாம்' என்கிறார், பார்வையற்ற கல்லூரி உதவி பேராசிரியை ஹேமலதா.விழி இல்லாவிட்டாலும் தனது மனக்கண்ணாலும், முயற்சியாலும், திண்டுக்கல் எம்.வி.எம்., கலைக்கல்லூரி மாணவிகளுக்கு பாடம் நடத்துகிறார், உதவிபேராசிரியை ஹேமலதா,36. 

திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டையில் பிறந்தவர். பிறவி முதல் பார்வை இழந்தவர். மனம் தளராத ஹேமலதா, சென்னை பார்வையற்றோர் பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். திண்டுக்கல் எம்.வி.எம்., கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை (ஆங்கிலத்தில்) படித்து, பல்கலை அளவில் தங்க மெடல் வாங்கி சாதனை படைத்தார். இதே கல்லூரியில் எம்.பில்., முடித்தார். பல்கலை நடத்தும் "ஸ்லெட்' தேர்வில் வெற்றி பெற்று, தான் படித்த கல்லூரியிலேயே உதவி பேராசிரியராக இன்று பணிபுரிகிறார்.


தெளிவு:

ஆங்கில புத்தகத்தில் அனைத்து பாடத்தையும் "பிரெய்லி' முறையில் படித்து, மனப்பாடம் செய்துள்ளார். இளங்கலை ஆங்கில வகுப்பில், பாடங்களை மாணவிகள் புரியும் வகையில் நடத்துகிறார். மாணவிகள் கேட்கும் சந்தேகங்களுக்கும் தெளிவாக பதிலளிக்கிறார்.

ஹேமலதா கூறியதாவது:


விவசாய குடும்பத்தில் நான் பிறந்தேன். எனது பெற்றோர் படிக்காதவர்கள். அவர்களது, உறவு முறை திருமணம் எனது கண்களை பாதித்தது. மனம் தளரவில்லை. ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று கல்லூரி ஆசிரியராகி விட்டேன். நல்ல மாணவிகளை உருவாக்குகிறேன் என்ற சந்தோஷம் உள்ளது.என்னை போல ஏழை மாணவிகள் தன்னம்பிக்கையுடன் படித்தால், முன்னேறலாம், நீங்கள் நினைத்தை உழைப்பினால் மட்டுமே சாதிக்க முடியும். உறவு முறை திருமணம் வேண்டாம். புறக்கண்கள் இல்லாவிட்டாலும், அகக்கண்களால் அனைவரும் பாராட்டும் வகையில் பணி மேற்கொண்டுள்ளேன்,என்றார்.­