சிவகங்கை: இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, பள்ளியில் சேர்க்கும் பணியை, தமிழகம், ஒடிசா மாநிலங்களில், சோதனை முயற்சியாக செயல்படுத்த, உலக ஆசிரியர் கல்வி அமைப்பு உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டில் கல்லாமையை போக்க, ஆஸ்திரேலிய நாட்டு ஆசிரியர் இயக்கம் உதவி வருகிறது. இதன்படி, 6 முதல், 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை, பள்ளியில் சேர்க்க வேண்டும்; மாணவர்கள் எக்காரணத்தை கொண்டும் இடை நிற்க கூடாது; இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழகம், ஓடிசா மாநிலங்களில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த, உலக ஆசிரியர் கல்வி அமைப்பு த்தரவிட்டுள்ளது. சிவகங்கை, பெரம்பலூர் மாவட்டங்களில், முற்கட்டமாக இப்பணி நடக்க உள்ளது. மாவட்டத்திற்கு தலா, ஐந்து கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, பள்ளியில் சேர்க்க வேண்டும்.
இதுகுறித்து, திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர், ஜோசப் சேவியர் கூறுகையில், "டிசம்பர் மாதத்திற்குள், இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்படுவர். இதுகுறித்த அறிக்கையை,
உலக ஆசிரியர் கல்வி அமைப்பு, ஆஸ்திரேலியா நாட்டு கல்வி அமைப்பு ஆகியவற்றிக்கு அனுப்பப்படும்" என்றார்.