புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு லட்சக்கணக்கில் பரிசு வழங்குகிறது தேசியக் கண்டுபிடிப்பு அறக்கட்டளை
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினுடைய தன்னாட்சி பெற்ற நிறுவனமான தேசியக் கண்டுபிடிப்பு அறக்கட்டளை புதிய கண்டுபிடிப்பாளர்களை ஆதரித்து, வளர்த்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்படும் கண்டுபிடிப்புகளுக்கு காந்திய விருதும், கணிசமான பரிசுத்தொகையும் அறிவிக்கிறது.
1. மனித சக்தி மூலமாக இயக்கப்படும் நெல் நாற்று நடவு செய்யும் கருவி
நாடு முழுக்க லட்சக்கணக்கான பெண்கள் நாற்று நடுவதற்கு உடலை வருத்தி துன்பப்பட வேண்டியதாக இருக்கிறது. இவர்களது சுமையைக் குறைக்கும் வண்ணம் கண்டுபிடிப்பு தேவை. பயன்படுத்துவதற்கும், பராமரிப்பிற்கும் எளியதாக கருவி இருக்க வேண்டும். எடை குறைவாக, சுமந்து செல்ல வாகாக உருவாக்கப்படுவது அவசியம். சாதாரண மனித உழைப்பில் நாற்று நடும்போது கிடைக்கும் பலனைக் காட்டிலும் மூன்று மடங்கு திறன் அதிகமாகக் கொண்டதாக இருப்பது நல்லது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும், மண்ணின் தன்மையையும் கருத்தில் கொண்டு அமைய வேண்டும். விவசாயிகள் பயன்படுத்துவதற்கு வசதியான விலையில் கிடைக்குமாறு இருக்க வேண்டும். சிறு நிலங்களில் தொடங்கி பெருநிலங்களுக்கும் பயன்படுத்தக்கூடிய அமைப்பில் கருவி இருக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இக்கருவியை உருவாக்கத் தேவையான அடிப்படைப் பொருட்கள் நாட்டின் எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடியதாக இருப்பது முக்கியம்.
2. தேயிலை அறுவை செய்யும் இயந்திரம்
மேனுவல்/செமி ஆட்டோமேட்டிக் வகையை சார்ந்ததாக இருப்பது விரும்பத்தக்கது. நெல் நாற்று நடவு இயந்திரத்துக்கு சொல்லப்பட்ட தன்மைகள் இதற்கும் பொருந்தும்.
3. சிக்கன விறகு அடுப்பு (குறைந்த புகை, அதிகத் திறன் வாய்ந்ததாக)
தற்போதைய முறையைக் காட்டிலும் குறைந்தது இரண்டு மடங்கு கூடுதல் திறனுடையதாக இருக்கவேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் வேறு வேறு வகை விறகுகளைப் பயன்படுத்த வாகானதாக அடுப்பினை வடிவமைக்கவேண்டும். சுற்றுச்சூழலுக்கு ஏதுவாக இருப்பது விரும்பத்தக்கது. சுலபமாகப் பிரித்து, மாட்ட வசதியானதாக இருப்பது அவசியம். அளவில் சிறியதாக, பயன்படுத்த எளிதாக இருப்பது முக்கியமானது. விலை குறைவானதாக இருப்பதாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த மூன்று பிரிவுகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வடிவமைப்பு, மாதிரிக் கருவிகளை தேசியக் கண்டுபிடிப்பு அறக்கட்டளை கோரியிருக்கிறது.
இந்த மூன்று பிரிவுகளுக்கும் தலா முதல் பரிசு பத்து லட்சம் ரூபாய் , இரண்டாம் பரிசு ஐந்து லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசு இரண்டரை லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
கருவிகளின் வரைபடத்தை அனுப்பிவைக்க கடைசி தேதி: 30.10.2012
இதில் தேர்வு செய்யப்படும் வரைபடங்களின் முன்மாதிரிக் கருவியினை 31.12.2012க்குள் சமர்ப்பிக்க தயாராக இருக்க வேண்டும்.
போட்டியில் பங்கெடுக்க குறிப்பான கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. தனி நபரோ, நிறுவனமோ, எந்தப் பிரிவைச் சார்ந்தோரும் பங்கெடுக்கலாம்.
வரைபடங்களை பொருத்தமான விளக்கத்தோடு அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :
Gandhain Inclusive Innovation Challenge Awards 2012,
National Innovation Foundation-India,
Satellite Complex, premchand Nagar Road, Ahmedebad - 380 015. Gujarat.
Phone : (079) 26732456, 2095 Fax : (079) 26731903
Email : info@nifindia.org
மேற்கொண்டு விவரங்களை www.nif.org.in என்கிற இணையதள முகவரியில் விரிவாககக் காணலாம்.
மேலும் விவரங்களை அறிந்துகொள்ள www.nif.org.in என்கிற இணையதள முகவரிக்குச் செல்லவும்.
பரிசுக்கும், விருதுக்கும் தயாரா?
விருதினை வெல்லப்போகும் வாசக விஞ்ஞானிகளுக்கு ‘முன்கூட்டிய வாழ்த்துகள்! - நன்றி- புதிய தலைமுறை’