புதுடில்லி: "இன்னும், ஏழு ஆண்டுகளில், அனைத்து மாணவர்களுக்கும், ஆகாஷ் டேப்லட் கம்ப்யூட்டர் வழங்கப்படும்" என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், கபில் சிபல் கூறினார்.
டில்லியில் நேற்று, இந்தியா - நியூசிலாந்து, கல்வி கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்துள்ள, நியூசிலாந்து, கல்வி, திறமை மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர், ஸ்டீவன் ஜாய்ஸ் தலைமையிலான, உயர்மட்டக் குழுவுடன், மத்திய அரசு, பல உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
இந்த நிகழ்ச்சியில், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், கபில் சிபல் பேசியதாவது:
நாட்டின் உயர் கல்வியை மேம்படுத்த, மத்திய அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, பல மசோதாக்களை வரைந்துள்ளது. அவற்றை நிறைவேற்ற, எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால், நாட்டின் கல்வித் துறை மேம்படும்.
குறைந்த விலை, டேப்லட் கம்ப்யூட்டர் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில், அரசு முனைப்பாக உள்ளது. இன்னும், ஐந்து முதல், ஏழு ஆண்டுகளுக்குள், அனைத்து மாணவர்களுக்கும், இது வழங்கப்படும்.இவ்வாறு, கபில் சிபல் பேசினார்.