கைகளை இழந்த பிறகும் மனம் தளராமல் கால்களால் எழுதிப் படித்து, ஆசிரியராகப் பணியாற்றுகிறார் வெங்கடேசன்
2009ம் ஆண்டு மதுரையில் நடந்த தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டியில் சிறந்த வீரருக்கான விருதும், நான்கு பதக்கங்களும், 2011ல் தேசியளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், மூன்று வெள்ளிப் பதக்கம், தேசிய அளவில் தனி நபர் சாம்பியன். சர்வதேச பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதி.
வெங்கடேசனின் வீடு விருதுகளாலும், பதக்கங்களாலும் நிரம்பியிருக்கிறது.
சொந்த ஊரு தருமபுரி பக்கத்திலே ஒட்டாம்பட்டி. அப்பா, அம்மா விவசாயத் தொழிலாளர்கள். எல்லா நாளும் வயக்காட்டில்தான் வேலை. அஞ்சாவது படிச்சிக்கிட்டிருந்தப்போ,அறுந்து கீழே விழுந்து கிடந்த மின்கம்பியை தெரியாத்தனமா தொட்டுட்டேன். சம்பவ இடத்துலேயே கை ரெண்டும் கருகிடிச்சு. ஆபரேஷன் பண்ணி ரெண்டு கையையும் எடுத்துட்டாங்க. என் வாழ்க்கையே முடிஞ்சிடிச்சுன்னும் நெனைச்சேன்" என்கிற வெங்கடேசனின் கண்களில் இப்போதும் அதை நினைத்து ஈரம் கசிகிறது.
யாரோ சொல்லி, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு உதவி கோரி விண்ணப்பித்திருக்கிறார். முதல்வர் அலுவலகத்தின் பரிந்துரைப்படி சென்னை பிசியோதெரபி கல்லூரியில் சேர்ந்து படிக்க அவருக்கு அழைப்பு வந்தது. அங்கேதான் கால்களால் எழுத, புத்தகத்தைப் புரட்டிப் படிக்க, அன்றாடப் பழக்க வழக்கங்களை கையின்றி மேற்கொள்ள பயிற்சி பெற்றார். சிறுவயதில் அவருக்கு விளையாட்டு மீது அப்படி ஓர் ஆர்வம். தருமபுரி மாவட்ட பாராலிம்பிக் கழகச் செயலாளர் கே.பாலமுருகனின் கண்ணில் பட்டார். அவரது ஊக்கத்தில் மீண்டும் விளையாட்டுகளில் ஈடுபட ஆரம்பித்தார்.
பலரும் எனக்கு உதவினார்கள். எம்.எட். வரை படிக்க முடிந்தது. அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. மனநிறைவு தரும் பணி. விளையாட்டுத் துறையில் சாதிப்பதைப் போலவே கல்விப் பணியிலும் நான் சாதனைகள் புரியவேண்டும். என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும் விரும்புகிறேன்" என்கிறார் உறுதியான குரலில்.
வெங்கடேசன் செல்பேசி: 99416 99070