தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சேசம்பட்டி கிராமத்தில் ஓய்வு நேரங்களில் மாணவர்களே தனிவகுப்பு நடத்தி வருகின்றனர். இதனால், படிப்பவர்களின் எண்ணிக்கையும், அரசு வேலையில் சேர்பவர்களின் எண்ணிக்கையும் அதிரித்து வருவதுடன், ஜாதிப்பூசல்களும் அறவே ஒழிந்துள்ளது.
முதல் விதை: சேசம்பட்டியில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இக்கிராமத்தில் படித்து முடித்த நான்கு முதல்தலைமுறை பட்டதாரிகள், வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது வேலைக்காகத் தயாரான பிறகு, ஓய்வாக இருந்த மற்ற நேரங்களில் அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் தனி வகுப்பு எடுத்து வந்தனர். பின்னர் வேலை கிடைத்த பிறகும், வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். இது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. படித்த மாணவர்கள் நடத்தும் வகுப்பு என்பதால் அங்குள்ள பெற்றோர்களே முன் வந்து, தங்கள் குழந்தைகளை வகுப்பில் சேர்த்தனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் இறுக்கமான ஜாதிய கட்டமைப்பு இருந்த நேரத்தில் தலித் மாணவர்களையும் வகுப்பில் சேர்த்தனர். ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தது. பின்னர் சகஜ நிலைக்கு வந்தது. இன்று அனைத்து ஜாதி மாணவர்களும் இங்கு படிக்கின்றனர்.
மாணவர்களே ஆசிரியர்கள்: பாடம் நடத்தும் ஆசிரியர்கள் ஊரில் இல்லாத போது, அங்கு படிக்கும் மாணவர்களில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களிடம் வகுப்பு நடத்தும் பொறுப்பை ஒப்படைத்தனர். இது ஐந்து ஆண்டுகளாக நடந்தது. பின்னர் அடுத்த தலைமுறை மாணவர்கள் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்ந்தனர். அம்மாணவர்கள் கல்லூரி விடுமுறை நாட்களில் இங்கு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. எனவே, விடுமுறையில் ஊருக்கு வரும் மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் அக்கறையுடன் பாடம் நடத்தினர். இதனால் பள்ளி இடை நிற்றலும், தேர்வில் தோல்வியும் இல்லாமல் போனது. அதுமட்டுமின்றி, இன்று 90 சதவீதம் பேர் இங்கு கல்வியறிவு பெற்றிருக்கின்றனர்.
ஊர் முழுக்க அரசு அதிகாரிகள்: இப்பகுதி பொருளாதார, தொழில் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளதால், அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இயல்பாக இருக்கிறது. இதற்காக, படிக்கும் காலங்களில் பாடத்திட்டத்தோடு, அரசு வேலைகளில் சேர்வதற்கான பயிற்சியிலும் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோடை விடுமுறை காலங்களில் இதற்கென்றே சிறப்பு வகுப்புகள் இங்கு நடக்கின்றன. அந்தந்தத் துறையில் பட்டம் பெற்ற மாணவர்கள், இங்குள்ள தனியார் கட்டடத்தில் வசதி படைத்தோரிடம் கட்டணம் பெற்றும், ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாகவும் வகுப்பு நடத்துகின்றனர். பத்து ஆண்டுகளாக இங்கு சிறப்பு வகுப்புகள் நடப்பதால் அரசுப் பணியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாணவர்களின் இது மாதிரியான வழிகாட்டுதலுக்குப் பலனாக, இன்று ஊரின் மொத்த மக்களில் பாதிபேர் அரசுப் பணிகளில் உள்ளனர்.
பல்வேறு பயிற்சி: இப்பகுதியில் அரசு வேலையில் சேர்பவர்கள், அந்தந்தத் துறை தொடர்பான வேலைவாய்ப்புகள் குறித்து அடுத்த தலைமுறை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து காவலராக தேர்வாகி இருக்கும் சின்னதம்பி கூறியதாவது, ""நானும் இங்குள்ள தனி வகுப்பில் படித்தேன். காவல் துறையில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காக தனி வகுப்பில் படித்து, தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்தேன். இன்று ஓசூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறேன். விடுமுறை நாட்களில் இங்கு காவல்துறையில் வேலைக்குச் சேர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்,'' என்று சொல்லி விட்டு, மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கச் சென்றார். இது போல், தொழிற்கல்வி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கும் மாணவர்களை இங்கு தயார் படுத்துகின்றனர்.