முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறிஇருப்பதாவது:-
மனித வாழ்க்கை வளம் பெறுவதற்கும், சமுதாய மேம்பாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்குவது வற்றாத செல்வமாம் கல்வி என்பதை உணர்ந்த எனது தலைமையிலான அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்விக்காக காசு செலவழிக்கத் தேவையில்லை என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
இந்த 54 குடியிருப்புப் பகுதிகளிலும் புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் என்பதையும், அப்பள்ளிகளுக்கு தேவைக்கேற்ப ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில், 5 கிலோமீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப்பள்ளி ஏற்படுத்தப்படவேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய அரசால் நிதி உதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியிலிருந்து 2013-2014 ஆம் கல்வியாண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமையாசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர் நிலைப்பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
இதேபோன்று, 2013-2014 ஆம் கல்வியாண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதையும், இவ்வாறு தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமையாசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் பள்ளி ஒன்றுக்கு ஒன்பது முதுகலை ஆசிரியர் பணியிடம் வீதம் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கென ஆண்டொன்றுக்கு 45 கோடி ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சார்ந்த தொழிலாளர்கள் பணிநிமித் தம் இடம்பெயர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தங்களது குடும்பங்களுடன் தற்காலிகமாக குடியேறுகின்றனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்த 6081 தொழிலாளர்களின் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு கல்வி பெறும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் நல்நோக்குடன் “இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி வசதி அளிக்கும் திட்டம்” என்ற புதிய திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன்படி, இடம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் குழந்தைகள் அவர்தம் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பள்ளிகளில் முறையாக சேர்க்கப்படுவர். இவர்களுக்கு அவர்களது தாய்மொழியும் கற்பிக்கப்படும். இதன் மூலம் அரசுக்கு தோராயமாக 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
மாணவ-மாணவியருக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் தரமானதாகவும், குறித்த காலத்திலும் வழங்கப்படவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் வெவ்வேறு இயக்கங்கள் கல்வி சார்ந்த பணிகளில் தனிக்கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அடிப்படையிலும், மாணவ-மாணவியருக்காக வழங்கப்படும் அனைத்து பொருள்களையும் கொள்முதல் செய்து விநியோகிக்கும் பணி இனி வருங்காலங்களில் தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு வழங்கப்படும் என்பதையும், தமிழ்நாடு பாடநூல் கழகம் கொள்முதல் ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட ஏதுவாக “தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்” என பெயர் மாற்றம் செய்யப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டுள்ள எனது தலைமையிலான அரசு, விளையாட்டிற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவது, பள்ளிகளில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது, தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை விளையாட்டு உபகரணங்கள் வழங்கி ஊக்குவிப்பது என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நடப்பாண்டு முதல் மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் மாணவ-மாணவியருக்கு உதவி புரியும் வகையில், இதற்கென முதன்முறையாக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகள் மேல்நிலைப் படிப்பு பயில ஏதுவாக, மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியுடன் 44 பெண்கள் விடுதிகள் கட்டுவதற்கு 2009-2010 ஆம் ஆண்டு ஆணையிடப்பட்டது. இருப்பினும், ஒப்பளிக்கப்பட்ட தொகை இவ்விடுதிகள் கட்ட போதுமானதாக இல்லை என்கின்ற காரணத்தினால், இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியுடன் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதைக் கருத்தில் கொண்டு, நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், கூடுதல் நிதியை அளிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்ள உத்தரவிட்டேன்.
மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் வராத சூழ்நிலையில், பெண்களுக்கான விடுதிகள் உடனடியாக கட்டப்பட வேண்டும் என்பதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு விடுதியிலும் 100 பெண்கள் தங்கக்கூடிய 44 பெண்கள் விடுதிகள் கட்டத் தேவைப்படுகின்ற கூடுதல் நிதியான 31 கோடியே 46 லட்சம் ரூபாயை மாநில அரசின் நிதியிலிருந்து உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன்மூலம் 4400 பெண் குழந்தைகள் பயன்பெறுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் 44 ஒன்றியங்கள் கல்வியில் பின் தங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவியரின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக 2012-13 ஆம் ஆண்டு 26 மாதிரி பள்ளிகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கிராமப்புற மாணவர்களுக்கு பயனளிக்கக்கூடிய இந்த மாதிரி பள்ளிகளை தரமுடன் உடனடியாக கட்டி முடிக்க கூடுதல் நிதி உதவி தேவைப்படுவது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, இதற்கென 38 கோடியே 44 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் 10640 மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
மேற்காணும் அரசின் நடவடிக்கைகள், கல்வியின் தரத்திலும், உட்கட்டமைப்பிலும், விளையாட்டுத் துறையிலும் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.