கோவை: பல்வேறு காரணங்களால், இளைய தலைமுறையினர் இடையே, தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. பள்ளி பருவத்திலேயே, மாணவர்கள் படிப்பு மற்றும் சமூக நிலையில், சிறு தோல்விகளை கூட தாங்க முடியாத அளவுக்கு, விரக்தியின் உச்சத்துக்கு சென்று, உயிர் துறக்கும் பரிதாப முடிவை எடுக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த, கோவையில், சில கல்வி நிறுவனங்கள், ஆய்வுப் பணியை துவங்கியுள்ளன. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், குறைந்த மதிப்பெண், தேர்வில் தோல்வி ஆகிய காரணங்களுக்காக கோவையில் மட்டும், ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்துள்ளனர். தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விபரப்படி, இந்தியாவில் தற்கொலைகள் அதிகம் நடக்கும் நகரங்களில்,கோவை ஐந்தாவது இடத்தில் உள்ளது. சமூக பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகள், தொழில்நுட்ப வளர்ச்சி, குடும்ப உறவுகளில் உள்ள விரிசல், மனரீதியான பிரச்னைகள் என பல காரணங்களால் தற்கொலை எண்ணம் மேலோங்கி வருகிறது. கடந்த 2010ம் ஆண்டில், நாட்டில் நடந்த தற்கொலைகள், மொத்தம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 599. இதில், தமிழகத்தில் 12.3 சதவீத தற்கொலைகள் நடந்துள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிராவில் தலா 11.8, கர்நாடகாவில் 9.47 சதவீதம் தற்கொலைகள் நடந்துள்ளன. ஆண்டுக்கு சராசரி 15 சதவீதம் தற்கொலை அதிகரித்து வருவதாக, புள்ளி விபரங்களில் தெரிய வருகிறது. 14 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் தான், அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எதிர்மறையான மனமாற்றம் தற்கொலையில் முடிந்தால், இழந்த உயிரை, எந்த விலை கொடுத்தாலும் மீட்கவே முடியாது. தற்கொலையால் பாதிக்கப்படுபவர்கள், அவர்களின் குடும்பத்தினர் தான். அந்த இழப்பின் ரணம், எஞ்சிய வாழ்க்கை முழுவதும், உற்றாருக்கு வலியை தந்து கொண்டே இருக்கும்.
"சமூகத்தில் பிரச்னைகளை, தன்னால் எதிர்கொள்ள முடியாது என்ற, தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள், தன்னம்பிக்கையற்றவர்கள், கோழைகள் தான், சொந்த உயிருக்கே உலை வைக்கும் தற்கொலை என்ற, விபரீத முடிவுக்கு வருவர்' என, உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய சூழலில், தற்கொலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுபவர்களும் உண்டு. அபரிமிதமான எதிர்பார்ப்புகளை மற்றவர்கள் மீது, அவர்களின் தாங்கும் திறனுக்கு அதிகமாக திணிக்கும் போது, தற்கொலை தான் தீர்வு என்ற, அதீத முடிவுக்கு செல்கின்றனர். திணிப்பவர்கள் புரிந்து கொள்ளாதபோது, திணிக்கப்படுபவர்களும் வாழ்க்கையை புரிந்து கொள்ள முனைவதில்லை. இதன் இறுதி முடிவு, தற்கொலையில் முடிகிறது. எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தின் முதல்படி என்பதை உணர்ந்தவர்கள் குறைவு. மாணவர்களுக்கு புத்தக கல்வியை புகட்டும் பாட திட்டங்கள், அவர்களின் மனப்பூர்வமான பிரச்னைகளையும் ஆராயத் துவங்கினால், எதிர்காலத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கையை சிறிதேனும் குறைக்க முடியும். தற்கொலைகள் அதிகரிக்க காரணம் என்ன? இவற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? சமுதாயத்தில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு எத்தகைய பயிற்சியை தர வேண்டும் என, பல்வேறு கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சியில், கல்வி நிலையங்கள் ஈடுபட துவங்கியுள்ளன. இந்த ஆய்வின் முதல்படியாக, கோவை ஸ்ரீஜி கலை அறிவியல் கல்லூரியில், "பிரச்னைக்கு தற்கொலை முடிவல்ல' என்ற தலைப்பில் நடந்த, குழு விவாதத்தில், பெற்றோர், சமூகவியல் அறிஞர்கள், உளவியல் அறிஞர்கள், சமூக பணியாளர்கள், போலீஸ் துறையினர், லயன்ஸ் கிளப் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தற்கொலைக்கான காரணங்கள்:இந்த குழு விவாதத்தில், தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் இருப்பது குறித்து அலசப்பட்டது. "அதிக மதிப்பெண் பெற வேண்டும்; தொழில்நுட்ப கல்லூரிக்கு செல்ல வேண்டும்; வளாக நேர்காணலில், தேர்வாகி வேலைக்கு செல்ல வேண்டும்; வெளிநாடு சென்று அதிகம் சம்பாதிக்க வேண்டும்' என்பன போன்ற, எதிர்பார்ப்பை மாணவர்கள் மீது பெற்றோர் திணிக்கும்போது, அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது. தேர்வு குறித்த பயம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாத நிலை, புதிய சமுதாயத்தில் எளிதாக பழக முடியாத நிலை போன்ற, பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தத்தின் உச்சம், தற்கொலையில் முடிகிறது. இன்டர்நெட், "டிவி' உள்ளிட்ட அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துதல், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு குறைவு, பெற்றோரின் அன்பும், ஆதரவும் குறைவு, மனதாலும், உடலாலும் தனிமைப்படுத்தப்படுதல், அதிகமான வேலைப்பளு, அதிக எண்ணிக்கையில் நடக்கும் தேர்வுகள், பொறுமையின்மை, தன்னம்பிக்கை இல்லாமை, பெற்றோர் - குழந்தைகள் இடையே நெருக்கமில்லாத உறவு நிலை, ஆசிரியர் - மாணவர் அணுகுமுறை என, பல காரணங்கள், பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைத்து, தற்கொலைக்கு தூண்டுகின்றன என, விவாதத்தில் தெரிவிக்கப்பட்டது.விவாதத்தில், கல்லூரி முதல்வர் சேகர், ப.ரா.நடராஜன், ஐ.நடராஜன் (பெற்றோர்), கற்பகம் பொறியியல் கல்லூரி பேராசிரியர் பிரபாகர், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் வில்சன், சமூகவியல் நிபுணர் சிதம்பரலிங்கம், உளவியல் நிபுணர் செந்தில்குமார், சமூக பணித்துறை பேராசிரியர் பாஸ்கர், வக்கீல் அருள்மணி, லயன்ஸ் கிளப் பிரதிநிதிகள் வேலுசாமி, மகேஸ்வரி சற்குரு, தங்கப்பழம், பேராசிரியர்கள் தேன்மொழி, சிந்துஜா, மாணவர்கள் குமரேசன், தாமரை செல்வன், உமாராணி ஆகியோர் பங்கேற்றனர்.
தவிர்க்க என்ன செய்யலாம்?
* பெற்றோர் குழந்தைகளிடம் அன்பு காட்டி, ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும்.
* மன அழுத்தம் குறைய பெற்றோர், கல்வி நிறுவனங்கள் வழிவகை செய்ய வேண்டும்.
* மனக்குறையை சொல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.
* உணர்வுப்பூர்வமான புத்திக் கூர்மையை மேம்படுத்த வேண்டும்.
* வகுப்பறையில் கற்பித்தலை அறிவுப்பூர்வமாகவும், உலக செயல்களுடனும் தொடர்புபடுத்தி, மேற்கோள்களுடன் மேம்படுத்த வேண்டும்.
* ஆசிரியர்களுக்கு பிரச்னையுள்ள மாணவர்களை கையாள்வதற்கு, தேவையான பயிற்சி அளிக்க வேண்டும்.
* குழந்தைகளை உளவியல் ரீதியாக நல்ல முறையில் வளர்க்க, பெற்றோருக்கு தேவையான பயிற்சி அளிக்க வேண்டும்.
* கல்வி நிலையங்களில் மாணவர்களின் மனரீதியான பிரச்னைகளை போக்க உளவியல் ஆலோசனை மையங்கள் தகுந்த கட்டமைப்புடன் நிரந்தரமாக அமைக்க வேண்டும். அந்த மையங்களுக்கு பொறுப்பாளராக சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் அல்லது உளவியல் முதுகலை பட்டம் பெற்றவரை நியமிக்க வேண்டும் என, குழு விவாதத்தில் தெரிவிக்கப்பட்டது.