ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வகை செய்யும் மசோதா குறித்து, மத்திய அமைச்சரவையில் நடைபெற இருந்த விவாதம், நடைபெறாமல் போய்விட்டது. இதற்கு, திரிணமுல் காங்கிரசின் எதிர்ப்பே காரணம். இதனால், பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மத்திய அரசின் நடவடிக்கையில், முட்டுக்கட்டை விழுந்துள்ளது.
அரசு ஊழியர்கள் சேமித்து வரும் ஓய்வூதிய நிதியை, பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதன்மூலம், அந்த நிதியை பன்மடங்காக்கி அளிக்கப்படும் என்றுபணத்தை பங்குச் சந்தையில் போய் முடக்கக் கூடாது என்றும், அவ்வாறு செய்வதன் மூலம், ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும் என்றும் கூறி வருகின்றன.
முடிவெடுக்கவில்லை: இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்த மசோதா எடுத்துக் கொள்ளப்பட்டு, ஆலோசனை நடைபெறுவதாக இருந்தது.நேற்றைய கூட்டத்தில், மூன்றாவது விஷயமாக, இந்த மசோதாவை எடுத்துக் கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. வழக்கம்போல துவங்கிய அமைச்சரவை கூட்டம், முதலிரண்டு விஷயங்களை எடுத்துக் கொண்டது.மூன்றாவதாக, இந்த மசோதா வருவதற்கு முன்பே, அமைச்சரவை செயலர் எழுந்து, மூன்றாவது விஷயம் இன்று எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது எனக் கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால், ஓய்வூதிய மசோதா மீது, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
செய்தி குறிப்பு :வழக்கமாக, மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தால், கூட்டம் முடிந்த பிறகு, நிருபர்களிடம் பேசுவதற்காக, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், கபில் சிபல், அம்பிகா சோனி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருவர். அமைச்சரவை கூட்டத்தில், என்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்பது குறித்து, விளக்கமாக தெரிவிப்பர்.ஆனால், நேற்று வழக்கத்திற்கு மாறாக, எந்த அமைச்சர்களுமே, பத்திரிகையாளர்களை சந்திக்க வரவில்லை. வெறும் செய்திக் குறிப்பு மட்டும், நிருபர்களுக்கு வழங்கப்பட்டது. ஓய்வூதிய மசோதா எடுத்துக் கொள்ளப்படாமல் போனது குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பலாம் என்பதை அறிந்தே, அமைச்சர்கள் யாரும் வரவில்லை என்று தெரியவந்தது.
கடிதம்:முன்னதாக, நேற்று முன்தினம், திரிணமுல் காங்கிரஸ் அமைச்சரான முகுல் ராய், ஒரு கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியிருந்தார். அதில், ஓய்வூதிய மசோதாவை நிறைவேற்றினால், அது, லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை பாதிக்கும். எனவே, இம்மசோதா எடுத்துக் கொள்ளப்படுவதை, திரிணமுல் காங்கிரஸ் எதிர்ப்பதாக குறிப்பிட்டிருந்தார்.இந்த எதிர்ப்பு காரணமாகவே, நேற்று அமைச்சரவை கூட்டத்தில் திட்டமிடப்பட்ட, ஓய்வூதிய மசோதா எடுத்துக் கொள்ள முடியாமல் போனது. இதன் மூலம், மத்திய அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு, பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.