முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

தனியார் மெட்ரிக் பள்ளிகள் நடத்தும் வசூல் வேட்


முன்னணியில் உள்ள, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, இப்போதே மும்முரமாக நடந்து வருகிறது. கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, மே மாதம் தான், சேர்க்கைப் பணிகளை துவங்க வேண்டும்.

இதை மீறி, லட்சக்கணக்கில் நன்கொடை தருபவர்களுக்கு, எந்த கேள்வியும் கேட்காமல், சீட் வழங்கப்படுகின்றன. நடவடிக்கை எடுக்க வேண்டிய, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் வேடிக்கை பார்த்துவருகிறது.
தமிழகத்தில், 4,000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், முன்னணியில் உள்ள, 100க்கும் அதிகமான மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், 2013-14ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, இப்போதே, மும்முரமாக நடந்து வருகிறது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தில், மே மாதம் தான், மாணவர் சேர்க்கைப் பணிகளை துவங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி, மாநிலம் முழுவதும், மெட்ரிக் பள்ளி அதிகாரிகள், விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டனர்.
"மே மாதம் தான், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். முன்கூட்டி சேர்க்கை நடத்தினால், அந்த சேர்க்கை ரத்து செய்வதுடன், சம்பந்தபட்ட பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் எச்சரிக்கையை மீறியும், சட்டத்திற்கு எதிராகவும், முன்னணி தனியார் பள்ளிகளில், இப்போதே மாணவர் சேர்க்கை, தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையில், எல்.கே.ஜி., விண்ணப்பங்களை வாங்க, பெற்றோர், கால்கடுக்க, பல மணிநேரம் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. பெற்றோர்களின் ஆர்வத்தைக் காசாக்கும் முயற்சியில், பள்ளி நிர்வாகங்கள் இறங்கி உள்ளன.
சென்னை, சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், எல்.கே.ஜி., சீட் வாங்க, பல லட்சம் ரூபாய் செலவில், விளையாட்டு அரங்கம் கட்டித்தர, ஒரு பெற்றோர் முன்வந்த சம்பவமும், சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. இதேபோல், பல பள்ளி நிர்வாகங்கள், பல லட்சம் ரூபாயை, நன்கொடையாக கறக்கவும் தவறுவதில்லை.
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரக வட்டாரத்தினர் கூறியதாவது: பள்ளி நிர்வாகங்கள், நன்கொடை கேட்பதாக, பெற்றோர் தரப்பில் இருந்து, எழுத்துப்பூர்வமாக, எவ்வித புகாரும் வரவில்லை. புகார்கள் வந்தால், விசாரணை நடத்தி, சம்பந்தபட்ட பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுப்போம்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை, இப்போது நடத்தக்கூடாது. மே மாதம் தான் நடத்த வேண்டும். சில பள்ளிகள், மாணவர் சேர்க்கையை நடத்தி வருவதாக, செய்திகள் வருகின்றன. விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, துறை வட்டாரத்தினர் கூறினர்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது: பெரிய பள்ளிகள், அரசையும் மதிப்பதில்லை; சட்டத்தையும், அதிகாரிகளையும் மதிப்பதில்லை. அவர்கள், தங்களுக்கு என, தனி சட்டம் வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர்.
இதுபோன்ற, பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். சாதாரண பள்ளிகளில் தான், அவர்களது வேகத்தை காட்டுகின்றனர். சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், முன்கூட்டி சேர்க்கை நடக்கிறது. இந்த பள்ளிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம், மாநில அரசிடம் தான் உள்ளது. இந்தப் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, நந்தகுமார் கூறினார்.