முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

காலியாகும் அரசு பணியிடங்கள்: இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு


தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இதனால் அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிக்கிறது.

தமிழகத்தில் மொத்தம், 142 அரசுத் துறைகள் உள்ளன. கடந்த, 1996ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி எடுக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான கணக்கெடுப்பின்படி, 6 லட்சம் ஆசிரியர்கள், 3 லட்சம் அரசு ஊழியர்கள், 1 லட்சம் சீருடை பணியாளர்கள் மற்றும் 2 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என, மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
2001 முதல் 2005 வரை அதிகரிப்பு
கடந்த, 2001ம் ஆண்டு முதல், 2005ம் ஆண்டு வரை, தமிழகத்தில் வேலை நியமன தடைச்சட்டம் அமலில் இருந்தது. இதனால், தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளாக, புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. அதேசமயம், அரசுப்பணிகளில் இருந்து, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்தே வந்தது.
இந்திய தலைமை கணக்காய்வு நிறுவனத்தின், தமிழக பிரிவில், பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்களது அலுவலகத்தின் சார்பில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் ஆணை எண் வழங்கப்படும். அதன்படி, தமிழகத்தில் கடந்த, 1993ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஆண்டுதோறும், 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.
2011ல் 40 ஆயிரம் பேர் ஓய்வு
இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து, 2007ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, ஆண்டுதோறும், 40 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றனர். இந்நிலையில், 2012-13ம் நிதியாண்டில் மட்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஒட்டுமொத்தமாக, 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில் 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த, 1991ம் ஆண்டுக்கு முன்பு வரை, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், அரசுத் துறைகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அரசின் நலத் திட்டங்கள், சரியான முறையில் சென்றடைய வேண்டுமானால், அதற்கு எந்த அளவுக்கு ஊழியர்கள் தேவை; அந்த ஊழியர்களின் பணிகள் என்னென்ன என்பதுஉள்ளிட்ட, பல விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப அரசுத்துறைகளில், புதியதாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த நடைமுறை, 1991ம் ஆண்டுக்கு பின்னர் பின்பற்றப்படுவதில்லை. ஒவ்வொரு துறைக்கும், தோராயமாகவே ஆட்களை நியமனம் செய்கின்றனர்.
ஊழியர்களுக்கு பணி சுமை
அவர்களின் பணிகளும் வரைமுறைப்படுத்தப்படுவது இல்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், பொதுமக்களுக்கு அலைச்சலும் ஏற்படுகிறது. மத்திய அரசின், 13 வது நிதி ஆணைக்குழு, தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை, 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கியது.
அதில், "தமிழகம் வளர்ந்த மாநிலமாக உள்ளது. எனவே மத்திய அரசின் தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு போதிய அளவில் நிதி வழங்க முடியாது. எனவே தங்களது சொந்த நிதியில் இருந்தே செலவினங்களை தமிழக அரசு கவனித்து கொள்ள வேண்டும்" என தெரிவித்திருந்தது. மேலும், "ஓய்வு பெறும் அரசு ஊழியர் பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் புதியதாக ஆட்களை நியமனம் செய்யலாம். இதனால் அரசுக்கும் செலவினங்கள் குறையும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைமை நிலைய செயலர் சீனிவாசனிடம் கேட்டபோது, "நிதி நிலையை காரணம் காட்டி, அரசுப்பணியிடங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதில் கவனம்செலுத்தும் அரசு, மற்ற அரசுத் துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
ஓய்வுக்கு பிறகும் வேலை
அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னரும், மீண்டும் அவர்களுக்கே ஒப்பந்த அடிப்படையில், பணிகள் வழங்கப்படுகிறது. கருவூல கணக்கு துறையில் பணியாற்றி வந்த, 300 உதவி கருவூல அலுவலர்கள், சமீபத்தில் ஓய்வு பெற்றனர். ஆனால், இந்த பணியிடங்களுக்கு புதியதாக ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை.
மாறாக, ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் புள்ளியல் துறையில், சமீபத்தில் ஓய்வு பெற்ற, 120 பேருக்கு, ஒப்பந்த அடிப்படையில், மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்து வைத்து, அரசு வேலைக்காக காத்திருக்கும், 75 லட்சம் பேரின் கனவு கேள்விக்குறியாகி உள்ளது.