கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின், ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில், வட்ட, மாவட்ட தலைநகரங்களில், ஆங்கில பயிற்சி மையங்கள் துவக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, அரசு விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் தொழிற் நுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நடப்பு கல்வி ஆண்டான, 2012-13ல், இப்பயிற்சி துவங்குகிறது.
முதல்கட்டமாக, தமிழகத்தில் உள்ள, 96 பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 47 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 13 சீர்மரபினர் நல விடுதிகள், 5 சிறுபான்மையினர் நல விடுதி என, 161 கல்லூரி விடுதிகளின் மாணவர்கள், இதில் பயிற்சியை பெற உள்ளனர்.
ஒரு மாணவருக்கு, 2,800 ரூபாய் வீதம், 6,550 மாணவர்களுக்கு, 1.83 கோடி ரூபாய், மாநில அரசு சார்பில் செலவு செய்யப்பட உள்ளது. சென்னையில், 500 மாணவர்கள், திருச்சியில் 475, தஞ்சாவூரில் 475, காஞ்சிபுரத்தில் 250, திருவண்ணாமலையில் 150, திருவள்ளூரில் 100 மாணவர்கள் என, 32 மாவட்டங்களை சேர்ந்த, 6,550 மாணவர்கள், இந்தப் பயிற்சி மூலம், பயன் பெற உள்ளனர். 10 மாதங்கள் அளிக்கப்படும் இந்தப் பயிற்சி, அடுத்த மாதம் துவங்குகிறது.
ஒரு மணி நேரம் அளிக்கப்படும், இப்பயிற்சியில், பணிசார்ந்த மொழி கற்பித்தல், ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி, நடைமுறையில் பயன்படுத்தும் அடிப்படை சொற்கள், வாக்கியங்களை புரிந்து கொள்ளுதல், தகவல்களை தெளிவாக புரிந்து கொள்ளுதல், சரளமாகவும், தன்னிச்சையாகவும் ஆங்கிலம் பேசுதல், பிரபலமான தலைப்புகளிலிருந்து கருத்துகளை தெரிவித்தல், நிகழ்வுகள், அனுபவங்களை விவரித்தல் மற்றும் பேச்சு, இலக்கணம், உச்சரிப்பு உள்ளிட்டவைகளில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களின் உயர் கல்விக்கும், படிப்பை முடித்து செல்லும் மாணவர்கள், வேலையில் சேர எதிர் கொள்ள கூடிய தகுதி தேர்வு, குழு உரையாடல் மற்றும் நேர்காணல் உள்ளிட்டவைகளை, எளிதில் சமாளித்து வெற்றி பெறுவதற்கும் இப்பயிற்சி உறுதுணையாக இருக்கும்.
முதல் கட்டமாக, விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் பயன் பெற்றவுடன், அடுத்த கட்டமாக, வட்ட, மாவட்ட தலைநகர்களில் பயிற்சி மையங்களை அமைக்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.