அடுத்த 6 மாதங்களில் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர், கழிவறை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டில் உள்ள பல பள்ளிகளில், முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் கழிவறை, குடிநீர் போன்ற வசதிகள் இல்லை என்று சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு, புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது. அதில், நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவியருக்கு குடிநீர், கழிவறை வசதிகளை சம்பந்தப்பட்ட மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அமைத்துத் தர வேண்டும். இது தவிர பள்ளிகளில் செய்து தரப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து உச்ச நீதிமன்றம் இதற்கு முன்பு பிறப்பித்த உத்தரவுகளும் அடுத்த 6 மாதங்களில் நிறைவேற்றப்பட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், "அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முக்கியமாக பெண்கள் பயிலும் பள்ளிகளில் கண்டிப்பாக கழிவறை வசதியை ஏற்படுத்த வேண்டும்' என்று கூறியிருந்தது.
பள்ளிகளில் கழிவறை வசதி இல்லாததால் பெரும்பாலான பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்றும், கழிவறை வசதி இல்லாத பள்ளிகளில் மாணவிகள் படும் அவஸ்தை மிகவும் மோசமானது என்றும் அந்த பொதுநலன் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவு 21-ஏ, இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமையை அளிக்கிறது. அதே நேரத்தில் பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது இந்த அரசியல் சாசன சட்டப் பிரிவை மீறுவதாகும் என்று அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.