அறிவியல் குறித்த முக்கியத்துவத்தை மக்களிடம் பிரசாரம் செய்ய பட்டதாரி மாணவர்களுக்கு ஓராண்டு ஃபெல்லோஷிப் அளிக்கிறது, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்கீழ் செயல்படும் நேஷனல் கவுன்சில் ஃபார் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கம்யூனிகேஷன் ஆண்டுதோறும், அறிவியல் படிப்பின் முக்கியத்துவம் குறித்த அவசியத்தை அனைவரிடமும் பிரசாரம் செய்யும் நோக்கத்துடன், அறிவியல் பிரிவில் ஆர்வமும், அறிவியல் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட பட்டதாரி மாணவர்களை தேர்வு செய்து ஓராண்டு ஃபெல்லோஷிப் அளிக்கிறது. ஃபெல்லோஷிப்பிற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள், நேஷனல் கவுன்சில் ஃபார் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கம்யூனிகேஷன் மூத்த ஒருங்கிணைப்பாளரின் கீழ், அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், அறிவியலின் முக்கியத்துவம் குறித்து பிரசாரம் மேற்கொண்டிருக்கும் தன்னார்வ அமைப்புகளிடம் ஓராண்டு பயிற்சி பெறுவார்கள். இதன்மூலம் மாணவர்கள் ஒவ்வொரு மாநில, மாவட்டங்கள் வாரியாக அறிவியல் குறித்த பிரசாரம் மேற்கொள்வார்கள்.
இந்த ஃபெல்லோஷிப் பெற விரும்பும் மாணவர்கள் அறிவியல், பொறியியல், மெடிக்கல் சயின்சஸ், வேளாண்மை, இன்பர்மேஷன் டெக்னாலஜி, மாஸ் கம்யூனிகேஷன் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டப் படிப்பு அல்லது முதுநிலை பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டிருக்கும் மாணவர்களும் இந்த ஃபெல்லோஷிப் பெற விண்ணப்பிக்கலாம்.
இந்த ஃபெல்லோஷிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் டிசம்பர் 31, நிலவரப்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும். ஒருவேளை மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மாத உதவித்தொகையாக மாதம் ரூ.16 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும். ஃபெல்லோஷிப்பிற்குத் தேவையான புத்தகங்கள், கையேடுகள், ஸ்டேஷனரி பொருட்கள் வாங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் அளிக்கப்படுகிறது. இதுதவிர பயண உதவித்தொகையாக ரூ.15 ஆயிரம் அளிக்கப்படுகிறது.
ஃபெல்லோஷிப்பிற்காக தேர்வு செய்யப்படும் மாணவர்கள், அந்தக் காலத்தில் வேறு எந்தப் பணியிலும் ஈடுபட முடியாது என்பதையும் மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும்போது, மாணவர்கள் தங்கள் அறிவியல் குறித்த சிந்தனைகள், அறிவியல் மூலம் சமூகத்தை எப்படி மாற்றம் செய்ய முடியும் என்ற திட்டம் குறித்த விவரங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். மாணவர்கள் அனுப்பும் திட்டத்தின் சாத்தியக் கூறுகளைப் பொருத்தே தகுதியுடைய மாணவர்கள் இந்த ஓராண்டு ஃபெல்லோஷிப்பிற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Head (NCSTC), Department of Science and Technology,
Technology Bhavan, New Mehrauli Road,
New Delhi-110016.
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: நவம்பர் 30.
விவரங்களுக்கு : www.dst.gov.in