சத்துணவு, அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமனம் செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை டிவிஷன் பெஞ்ச் திங்கள்கிழமை தடை விதித்தது.
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலியாக இருந்த பணியிடங்களில் 28,595 பேர் அண்மையில் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனத்தில் விதிமுறைகள் பின்பற்றவில்லை எனவும், அனைத்து தகுதிகளும் உடைய தங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடக் கோரியும் 30-க்கும் மேற்பட்டோர் சென்னைஉயர் நீதிமன்ற மதுரை கிளையில்மனுக்களைத் தாக்கல் செய்தனர். இம் மனுக்களை விசாரித்த தனி நீதிபதி வினோத்குமார் கே சர்மா, சத்துணவு அங்கன்வாடிப்பணியாளர்களை கிராம அளவில் தேர்வு செய்வது ஏற்புடையதல்ல.இது அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணானது என்று கூறி, மேற்குறிப்பிட்ட பணியிடங்களில் நியமிக்கப்பட்டோர் நியமனம் செல்லாது என உத்தரவிட்டார். மேலும், இந்த நியமனங்கள் தொடர்பாக 2008 முதல் பிறப்பித்த அரசின் உத்தரவுகளை ஒருங்கிணைத்து, மாவட்ட வாரியாக தகுதி உள்ளவர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று, மாவட்ட அளவில் தேர்வுக் கமிட்டியை அமைத்து, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதியானவர்களைத் தேர்வுசெய்து நியமிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்ட துணைச் செயலாளர் எஸ். சந்திரமணி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.பி.எஸ். ஜனார்த்தனராஜா,எம்.துரைசாமி ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து, விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மனு விவரம்: குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துணவு திட்டத்தை அமல்படுத்தும்போது, அரசுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அடிப்படையிலேயே அவ்வப்போது அரசு சில ஆணைகளைப் பிறப்பித்து வந்துள்ளது. இத்திட்டத்தில் பணிபுரிபவர்கள் நிரந்தரப் பணியாளரோ, அரசுப் பணியாளரோ அல்ல. அரசுப் பணியாளர்களுக்கான அந்தஸ்தும்அவர்களுக்கு கிடையாது. இந்தத் திட்டத்தின் நோக்கத்தையும், பணியாளர்களின் பணித் தன்மையையும் தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. இவர்களுக்கு சிறப்பு ஊதியமே வழங்கப்படுகிறது. கிராம அடிப்படையில் பணியாளர் நியமிக்கப்படவில்லை. மையத்துக்கு அருகில் தகுதியானவர் இல்லையெனில் 10 கி.மீ. தூரத்துக்குள் தேர்வு செய்யப்படுவர். இதையும் தனி நீதிபதி கவனிக்கவில்லை. அரசு ஆணைகளில் வேறுபாடு இருந்தால், அதை டிவிஷன் பெஞ்ச் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். தனி நீதிபதி அந்த உத்தரவுகளை ரத்து செய்யக்கூடாது. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யவேண்டும். அதுவரை தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதிக்கவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.