டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வின் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை நீக்கியது.
இது தொடர்பாக தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த எம்.சின்னசாமி, முருகன் ஆகியோர் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
குரூப் 4 தேர்வை கடந்த ஜூலை 7-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது. அந்தத் தேர்வில் எங்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித் தாளில் 200 கேள்விகளுக்குப் பதிலாக மொத்தம் 105 கேள்விகள் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தன. இதனால் அரசு வேலை பெறுவதற்கான எங்களது வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி எஸ்.நாகமுத்து, முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "குறைபாடு உடைய கேள்வித் தாள் விநியோகம் செய்யப்பட்ட 13 பேருக்காக கடந்த செப்டம்பர் 27-ல் மறு தேர்வு நடத்தப்பட்டது' என டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீக்கப்படுவதாக நீதிபதி எஸ்.நாகமுத்து அறிவித்தார்.