அரசின் நலத் திட்டங்கள் உரிய நேரத்தில் மாணவர்களுக்கு சென்றடையவும் ஒன்றிய அளவில் பள்ளிகளை கண்காணித்து கல்வி தரத்தை மேம்படுத்தவும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணி இன்றியமையாதது. முதலமைச்சர் அப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க ஆணையிட்டதன் படி 34 உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் போட்டித் தேர்வு மூலமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 16 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் ஆவர். இவர்களுக்கு பயிற்சிக்கான பணி நியமன ஆணை, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே மேற்கொள்ளும் வகையில், இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை, விளையாட்டு, இளைஞர் நலத்துறை, சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் சிவபதி அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் முகமது அஸ்லாம், தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் இராமேஸ்வரமுருகன், பள்ளிக் கல்வி இயக்குநர் தேவராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.