விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கு, ஊக்க உதவித் தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்க உதவித் தொகை திட்டத்தில், உயர் நிலை மற்றும் மேல் நிலை பள்ளி விளையாட்டு மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாயும்; கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்களுக்கு, 13 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
கடந்தாண்டு ஜூலை 1 முதல், இந்தாண்டு ஜூன் 30 வரை நடந்த விளையாட்டுகளில் வெற்றி பெற்றோர் மட்டுமே, இதற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டுக் கழகங்கள், இந்திய விளையாட்டுக் குழுமம் நடத்தும் போட்டிகள் மற்றும் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளிலும், வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலரிடம், 10 ரூபாயை செலுத்தி, இதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். இம்மாதம், 31ம் தேதிக்குள், மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் அசல் சான்றிதழ் மற்றும் நகல் ஆகியவற்றுடன், விண்ணப்பத்தை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.