தமிழகத்தில் அரசுப் பணிகளில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வின் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தைத் தொடர்ந்து, நேற்று நடந்த குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இன்று மதியம் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கடலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முன்கூட்டியே வெளியானதாக புகார்கள் எழுந்தன.இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி முன்னாள் ஊழியரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.தேர்வுக்கு விண்ணப்பித்து மோசடியில் ஈடுபட்டவர்கள் இனி அரசுத் தேர்வே எழுத முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நட்ராஜ் கூறியுள்ளார்.நேற்று நடந்த குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் மறுதேர்வை எழுதலாம். மறு தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் நட்ராஜ் கூறினார்.