பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முதன் முறையாக காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளையும், தேர்வுத்துறை இயக்குனரகமே நடத்த உள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் துவங்கும் காலாண்டுத் தேர்வுக்காக, பாட வாரியாகக் கேள்வித்தாள் தயாரிக்கும் பணியில், தேர்வுத்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
வழக்கமாக, அந்தந்த மாவட்ட அளவில் பொதுவான தேர்வாக இத்தேர்வுகள் நடக்கும். அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கேள்வித்தாளை தயாரித்து, பள்ளிகளுக்கு வழங்குவர். இந்த முறையினால், பொதுத் தேர்வு கேள்வி அமைப்பை சரிவர மாணவ, மாணவியரால் புரிந்துகொள்ள முடியாமல், பொதுத் தேர்வின் போது திணறுவது, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, பொதுத் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரித்து, தேர்வை நடத்தும் தேர்வுத்துறை இயக்குனரகமே, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கும், பொதுவான கேள்வித்தாளை தயாரித்து வழங்கி, தேர்வை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, செப்டம்பர் முதல் வாரத்தில் துவங்கும் காலாண்டுத் தேர்வுக்காக, பாட வாரியாகக் கேள்வித்தாள் தயாரிக்கும் பணியில், தேர்வுத்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதற்காக, அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை அழைத்து, கேள்வித்தாள் தயாரிக்கும் பணியை, தேர்வுத்துறை செய்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் இப்பணிகளை முடித்து, மாத இறுதியில் மாவட்ட வாரியாக, கேள்வித்தாள் அனுப்பி வைக்கப்படும்.
தேர்வுத்துறையால் தேர்வு நடத்தப்பட்டாலும், மதிப்பீடு செய்யும் பணியில், அந்தந்தப் பள்ளி ஆசிரியர்களே ஈடுபடுவர் என தெரிகிறது.