முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

பள்ளி பாடத்திட்டத்தில் ஆர்.டி.ஐ. ( RTI)- மத்திய அரசு பரிசீலனை


    தகவல் பெறும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.,) குறித்து, மக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள மத்திய அரசு, இந்தச் சட்டத்தின் பல அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.

    தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான விவகாரங்களில், முதன்மையான நிறுவனமாகச் செயல்படும் மத்தியப் பணியாளர் நலத்துறை இதுதொடர்பாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் (என்.சி. இ.ஆர்.டி.,) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான வரைவுத் திட்டமும் விரைவில் தயாராக உள்ளது.

    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களை, பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்யும் விவகாரம், தற்போதுதான் ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. என்.சி.இ.ஆர்.டி., உடன் கலந்து ஆலோசித்த பின்னரே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என, மத்தியப் பணியாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். 

     அவர் மேலும் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்வேறு துறைகளிலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் கேட்டு, ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருவதால், பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்தச் சட்டம் தொடர்பான விவரங்களை இடம் பெறச் செய்யும் யோசனை உருவாகியுள்ளது. 

     அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.சில துறைகளின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் திறமைகள் எல்லாம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மூலம் தெரியவந்துள்ளன. 

அதனால், இந்தச் சட்ட அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டங்களில் இடம் பெறச் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டங்களில், இவை இடம் பெறலாம்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.