ஆசிரியர் தகுதி தேர்வுக்கான(டி.இ.டி.,) விண்ணப்பங்களை தவறாக பூர்த்தி செய்த காரணத்திற்காக, ஒரு லட்சம் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக, இணை இயக்குனர் சேதுராமவர்மா கூறினார்.
தேர்வுக்கு விண்ணப்பித்து ஹால் டிக்கெட் கிடைக்காதவர்களிடம் இருந்து திண்டுக்கல்லில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்காக ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் சேதுராமவர்மா மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முகாமிட்டிருந்தார்.
விண்ணப்ப நகல், வங்கி சலான் நகல் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வாங்கப்பட்டன. நகல் இல்லாதவர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது என அதிகரிகள் கைவிரித்தனர். ஏமாற்றமடைந்தவர்கள் அலுவலக வாசலில் ரோடு மறியல் செய்தனர். போலீசார் இவர்களை சமாதானப்படுத்தினர். கல்வி அலுவகத்திற்குள் சென்ற இவர்கள் இணை இயக்குனரை முற்றுகையிட்டனர்.
இதுபற்றி சேதுராமவர்மா கூறியதாவது: திண்டுக்கல், தேனி மாவட்டத்தை சேர்ந்த 140 பேர் விண்ணப்பத்தின் நகலுடன் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஹால் டிக்கெட் தரப்படும். மற்றவர்கள் விண்ணப்பத்தை தவறாக பூர்த்தி செய்திருக்கலாம். மாநிலம் முழுவதும் தவறாக பூர்த்தி செய்த ஒரு லட்சம் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில் தவறு இருந்தால் தெரிவிக்கலாம் என மே 24 அன்று அறிவித்திருந்தோம். தற்போது ஒன்றும் செய்ய முடியாது என்றார்.