சென்னை, ஜூலை 2: ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான மாநில அளவிலான கலந்தாய்வு திருச்சியில் இம் மாதம் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் திண்டுக்கல் சாலையில் உள்ள ஆக்ஸ்போர்டு கல்வியியல் கல்லூரியில் இந்தக் கலந்தாய்வு நடைபெறும்.
தொடக்கக் கல்வித் துறையின் இந்த பட்டயப் படிப்புக்கு விண்ணப்பித்தோருக்கான தர வரிசைப் பட்டியல், தேதி வாரியான கலந்தாய்வு விவரம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கான அழைப்புக் கடிதமும் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படிப்புக்காக விண்ணப்பித்தவர்கள், தாங்கள் விண்ணப்பித்த மையங்களில் செவ்வாய்,புதன் (ஜூலை 3,4) ஆகிய நாள்களில் இந்த அழைப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட கடிதத்துடனும் கலந்தாய்வில் அவர்கள் பங்கேற்கலாம்.
கலந்தாய்வு விவரம்: ஜூலை 5 (முற்பகல்) - மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரரின் குழந்தைகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள். ஜூலை 5 (பிற்பகல்) - ஆண்கள் (அறிவியல், கலை மற்றும் தொழிற்பிரிவு) ஜூலை 6 முதல் 8 வரை - பெண்கள் (அறிவியல், கலை மற்றும் தொழிற்பிரிவு).