பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்குப் பின், மதிப்பெண் மாறுதலுக்கு உள்ளான மாணவ, மாணவியர், தங்களது புதிய மதிப்பெண் சான்றிதழை, 31ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என, தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா அறிவிப்பு: பிளஸ் 2 தேர்வு முடிவுக்குப் பின், விடைத்தாள் நகல் பெற்ற மாணவ, மாணவியரில் பலர், மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தனர். மறு மதிப்பீடு, மறுகூட்டல் பணி நடந்து முடிந்து விட்டது. மதிப்பெண் மாறிய மாணவர்களுக்கு, அது குறித்த தகவல் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டன. இணையதளத்தில், திருத்தப்பட்ட மதிப்பெண்கள் வெளியிடப்பட்டன.
திருத்தப்பட்ட, புதிய மதிப்பெண் சான்றிதழ்கள், சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படுகிறது. மதிப்பெண்களில் மாற்றம் உள்ளது என அறிவிக்கப்பட்ட மாணவ, மாணவியர், ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில், எழும்பூர் பள்ளிக்குச் சென்று, தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்து, புதிய மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.
இந்த தேதிக்குள் மதிப்பெண் சான்றிதழ் பெறாத மாணவ, மாணவியர் அதன்பின் தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு வந்து பெற வேண்டும்.இவ்வாறு இயக்குனர் வசுந்தரா தெரிவித்தார்.