இன்று தொடங்கி, 29ம் தேதி வரை நடக்கும் தொடக்க கல்வித்துறை ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங்கை கண்காணிக்க, 13 இணை இயக்குனர்களை நியமித்து, தொடக்க கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார்.
தொடக்க கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர், ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோருக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கவுன்சிலிங், 31 மாவட்டங்களில் நடக்கிறது.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், இந்த கவுன்சிலிங்கை நடத்தி, பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான உத்தரவுகளை வழங்குகின்றனர். ஆயிரக்கணக்கான ஆசிரியர் பங்கேற்கும் கவுன்சிலிங் என்பதால், எவ்வித பிரச்னையும் இன்றி நடக்கவும், கவுன்சிலிங்கை கண்காணிக்கவும், 31 மாவட்டங்களை, 13 இணை இயக்குனர்களுக்கு பிரித்துக் கொடுத்து மேற்பார்வையிட, தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்க கல்வித்துறை உள்ளிட்ட பிற கல்வித் துறைகள் மற்றும் நூலகத் துறையில் பணிபுரியும் இணை இயக்குனர்கள், மேற்பார்வையிடும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.