புதுடில்லி:ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் மாணவர்களை தேர்வு செய்யும் போது, அனைத்து பள்ளிப் பாடத்திட்டங்களிலும், முதல் 20 சதவீத இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய தேர்வு முறையை, ஐ.ஐ.டி., கவுன்சில் உருவாக்கியுள்ளது. இது, அடுத்தாண்டு நடைமுறைக்கு வருகிறது.
எதிர்ப்பு:நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஒரே நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை, 2013ம் ஆண்டு முதல் அமல்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்தது. டில்லி மற்றும் கான்பூர் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாடத் திட்டங்களின் அடிப்படையில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்துவது சரியல்ல என்றும், இதன் மூலம் திறமையான மாணவர்களை தேர்வு செய்ய முடியாமல், ஐ.ஐ.டி.,க்களின் தரம் குறைய வாய்ப்புள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
தீர்மானம்: இதனால், கான்பூர் மற்றும் டில்லி ஐ.ஐ.டி.,க்கள் தனியாக தேர்வு நடத்துவோம் என அறிவித்தன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, ஐ.ஐ.டி., கவுன்சில் சார்பில், டில்லியில் நேற்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அரசு தரப்பிலான பிரதிநிதிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள, 16 ஐ.ஐ.டி.,க்களின் இயக்குனர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், கருத்து வேறுபாடுகளை களையும் விதத்தில் புதிய தேர்வு முறையை அமல்படுத்த ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
சிறப்பு வாய்ப்பு:புதிய தேர்வு முறையின்படி, பொது நுழைவுத் தேர்வு தவிர, "அட்வான்ஸ் டெஸ்ட்' எனப்படும் சிறப்புத் தேர்வு ஒன்று நடத்தப்படும். இதில், ஒவ்வொரு பாடத் திட்டத்தின் கீழும், பள்ளி வகுப்பில் தேர்ச்சி பெற்ற, முதல் 20 சதவீத மாணவர்களுக்கு, சிறப்பு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் மட்டுமின்றி, அனைத்து பாடத் திட்டங்களிலும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணும் இதில் தகுதியாக இணைக்கப்படும்.
புறக்கணிப்பு:இதை அனைத்து ஐ.ஐ.டி.,க்களும் ஏற்றுக்கொண்டதால், இப்புதிய தேர்வு முறை, 2013ம் ஆண்டில் இருந்து அமலுக்கு வரும் என, ஐ.ஐ.டி., கவுன்சில் உறுப்பினர் தீபேந்திர ஹூடா கூறினார்.