பதிவுமூப்பு அடிப்படையிலான நியமனத்தில், விடுபட்ட பட்டதாரி ஆசிரியர் பதிவு மூப்புதாரர்களுக்கு 23ம் தேதியும், விடுபட்ட முதுகலை பதிவு மூப்புதாரர்களுக்கு 24ம் தேதியும், ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கிறது.
கடந்த, 2010-11 ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு நியமனத்தில், 350 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. விடுபட்ட பதிவுமூப்புதாரர் பட்டியல் மூலம், இந்த பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 1,500 பேருக்கு, வேலூர், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய ஐந்து மண்டலங்களில், 23ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று தெரிவித்தது. சம்பந்தப்பட்ட பதிவுதாரர்களுக்கு, தபாலில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளன.
அதேபோல், 2010-11 ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், நிரம்பாமல் உள்ள 120 பணியிடங்களை நிரப்ப, 24ம் தேதி, மேற்கண்ட ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கிறது. இதற்காக, 480 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.