குரூப்-2 நிலையில், ஏற்கனவே 7,000 இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில், 3,631 காலியிடங்களை நிரப்ப, மேலும் ஒரு குரூப்-2 தேர்வை, நேற்று மாலை டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது.
இதற்கான முதற்கட்டத் தேர்வு, ஆகஸ்ட் 12ல் நடைபெற உள்ளது. பட்டதாரி தகுதி கொண்டவர்கள், ஜூலை 13ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் செலுத்த, ஜூலை 17ம் தேதி கடைசி நாள்.
மொத்த காலிப் பணியிடங்களில், சார்-பதிவாளர் பதவிக்கு 52 பணியிடங்கள், நகராட்சி கமிஷனர் பதவிக்கு 14 பணியிடங்கள், இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் 181, இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் 229 மற்றும் வருவாய்த் துறையில், உதவியாளர் பணியிடம் 380 ஆகியவை குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, இந்து அறநிலையத்துறை அலுவலர் உட்பட வேறு சில பதவிகளும், இத்தேர்வில் அடங்கி உள்ளன. ஏற்கனவே நிரந்தர பதிவு செய்தவர்கள், இத்தேர்வுக்காக தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களுக்கான எண்களைக் கொண்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேர்வுக் கட்டணத்தை மட்டும் வங்கி அல்லது தபால் நிலையங்களில் செலுத்தினால் போதும்.
அதேபோல், குரூப்-4 தேர்வுக்காக விண்ணப்பித்த, 11 லட்சம் பேரின் பதிவுகளும், நிரந்தர பதிவிற்கு மாற்றப்படுவதால், அவர்களும் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை என, தேர்வாணைய செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.
முதல் நிலை மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரு நிலைகளில், இத்தேர்வு நடக்கும். நேர்முகத் தேர்வுக்குப் பின், அக்டோபரில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.ஏற்கனவே, குரூப்-2 நிலையில், 7,000 பணியிடங்களை நிரப்ப, முதற்கட்ட தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது அடுத்தக்கட்ட தேர்வு அறிவித்திருப்பது, வேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.