உயர்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை
தமிழகத்தில், 1,100 உயர்நிலைப் பள்ளிகள் ஓராண்டாக, தலைமையாசிரியர்கள் இல்லாமல் செயல்படுகின்றன. இதனால், மாணவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் வழங்குவதுடன், புத்தகங்கள் வழங்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது.
காலி:மாநிலத்தில் தற்போது, 3,200 உயர்நிலைப் பள்ளிகளில், 25 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவற்றில், கடந்த ஓராண்டாக, 1,100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், தற்போது, 1,000 தலைமையாசிரியர்கள் தலா இரு பள்ளிகளை (ஒரு பள்ளிக்கு கூடுதல் பொறுப்பு) கவனிக்கும் பொறுப்பில் உள்ளதால், மாணவர்களின் கற்றல் கல்வி பணியை மேற்பார்வை செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.காரணம் என்ன? தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் கவுன்சிலிங் மற்றும் பதவி உயர்வு அளிக்காததே, தலைமையாசிரியர்கள் பற்றாக்குறைக்கு காரணம் என, பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும், மே மாதத்தில் தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் கவுன்சிலிங்கும், ஜூன் மாதத்தில் பதவி உயர்வும் அளிக்கப்படும். ஆனால் இந்தாண்டு, இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில், எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. கோடை விடுமுறை முடிந்து, தற்போது அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. தலைமையாசிரியர்கள் இல்லாததால், மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவது, சீருடைகள், அரசின்நலத்திட்டங்கள் வழங்குவது, ஜாதிச் சான்று வழங்குவது போன்ற பணிகள் கடுமையாக பாதிக்கின்றன. குறிப்பாக, தற்போது 10ம் வகுப்பு முடித்து, வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, டி.சி.,யை தலைமையாசிரியர் மட்டுமே வழங்க வேண்டும். தலைமையாசிரியர்கள் இல்லாததால், மாணவர்களும், பெற்றோரும் அலைக்கழிக்கப்படுகின்றனர்