மாணவர் சேர்க்கை குறித்து பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாணவர் சேர்க்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர் வருகை குறித்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கடுமையாக உழைத்து, மாணவர்களின் தனித் திறனை கண்டறிந்து அதை மேம்படுத்த வேண்டும். படிப்பில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் வாரத்தில் 10 பாட வேளையாவது மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். தினமும் 2 முறை வகுப்புகளுக்கு சென்று ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறைகளை கண்காணிக்க வேண்டும்.
பள்ளிகளில் தினமும் கூட்டு பிரார்த்தனை கட்டாயம் நடத்தி, முக்கிய செய்திகளை மாணவர்களுக்கு தெரிவிப்பது, தனித்திறன் படைத்த மாணவர்களை மேடையில் நிறுத்தி பாராட்டு தெரிவிப்பது போன்றவற்றை செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் பிறந்த நாள் காணும் மாணவ, மாணவிகள் பட்டியலை தயாரித்து, பிரார்த்தனை கூட்டத்தில் அவர்களுக்கு கூட்டாக வாழ்த்து கூறுவது அவசியமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.